மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித் துறை சோதனை

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிரந்தரமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 850-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. மேலும், நிலக்கரி அரவை, சாம்பல் கையாளும் பிரிவிலும் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த தனியார் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று காலை 5 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர், மேட்டூர் அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள அந்த தனியார் நிறுவன அலுவலகத்திலும், அனல் மின் நிலையத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 8.30 மணிக்கு முடிந்தது. இதில், அலுவலகத்திலிருந்து முக்கியமான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் 3 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் காலை 10 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இன்று நடந்த சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை கொண்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த தனியார் நிறுவனம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது என கூறப்படுகிறது.

இதனால் அப்போதிருந்து பயன்படுத்தி வந்த ஆவணங்கள், நிதி கணக்குகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நிலக்கரி அரவை, சாம்பல் கையாளும் பிரிவில் பயன்படுத்தி வரும் வாகனங்கள் எண்ணிக்கை, அதற்கான பராமரிப்புக்கு செலவு செய்த தொகை, ரசீது உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். காலை 10.00 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணியை கடந்தும் நீடித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE