தருமபுரி அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் துர்நாற்றம்: அதிகாரிகள் தீவிர சோதனை

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பனைகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிலும் இந்தப் பள்ளியில் மாணவ, மாணவியரின் பயன்பாட்டுக்காக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக இன்று (செப்.21) மாணவ, மாணவியர் பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசனிடம் தெரிவித்துள்ளனர்.

உடனே, தலைமை ஆசிரியர் கணேசன் தொட்டியில் இருந்த தண்ணீரை ஆய்வு செய்தபோது துர்நாற்றம் வீசுவது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இதுகுறித்து, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் மற்றும் பாப்பாரப்பட்டி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலரும், காவல் துறையினரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தொட்டியில் இருந்த தண்ணீரை ஆய்வுக்கு தேவையான அளவில் சேகரித்த பின்னர் தொட்டியில் இருந்த நாற்றம் வீசும் தண்ணீரை வெளியேற்றி தொட்டியை சுத்தம் செய்தனர்.

இதற்கிடையில், தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘ஆய்வு முடிவுக்கு பிறகே உண்மையான தகவல் தெரிய வரும். முதற்கட்டமாக, பறவை எச்சம் அல்லது விலங்குகளின் கழிவு ஏதேனும் தண்ணீரில் விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது’ என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE