சென்னை: ''காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில், காவிரி படுகை உழவர்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?'' என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு மலைபோல நம்பிக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவால் அந்த நம்பிக்கை சிதைந்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை கூட வேண்டும்; அவற்றின் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்று ஆணையிட்ட உச்ச நீதிமன்றம், இதைத் தவிர்த்து காவிரி பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றின் ஆணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை அல்ல. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரண்டுமே நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்படவில்லை; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, 2018-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இடர்பாட்டுக்கால நீர்ப்பகிர்வு முறைப்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு ஆணையிட இரு அமைப்புகளும் தவறி விட்டன என்பது தான் தமிழ்நாட்டின் குற்றச்சாட்டு ஆகும்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 10000 கன அடி வீதம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆணையிட்டிருந்தது. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் கருகிக் கொண்டிருக்கும் குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற இது போதாது என்றும், வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரி தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
» காரைக்குடி ரயில் நிலையத்தில் அளவில்லா சிரமங்கள்
» முதல்வரை கே.பி.அன்பழகன் அவதூறாக பேசியதாக எஸ்.பி.யிடம் தருமபுரி திமுக நிர்வாகிகள் புகார் மனு
தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இப்போது தான் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஆய்வுக்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை. காவிரி படுகை மாவட்டங்களில் நிலவும் மிகவும் மோசமான சூழலை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு புரியவைக்க தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டாலும் அதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால், அதைக் கொண்டு கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற வேறு வழிகளே இல்லை என்ற நிலை தான் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் பயிர்களை காப்பாற்றுவதற்கு அதிரடியாக நடவடிக்கைகள் தேவை என்பதை கடந்த இரு மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், நிலைமையை சமாளிப்பதற்கு தேவையான வேகத்தில் தமிழக அரசு செயல்படவில்லை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிடும்படி மத்திய அரசுக்கு அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்க ஆயிரம் வழிகள் இருந்தன. ஆனால், அவற்றை செய்யவோ, அவை குறித்து ஆராயவோ தமிழக அரசு தயாராக இல்லை. அதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதற்கு கூட தமிழக அரசு முன்வரவில்லை.
மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்து, அதன் வாயிலாக கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீரைப் பெற்று, காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற ஏதேனும் வழிகள் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். எந்த வாய்ப்புகளும் இல்லை என்று தமிழக அரசு கருதினால், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago