தி.மலை கிரிவல பாதையில் ‘கண்காணிக்காத’ கண்காணிப்பு கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்துள்ளதால் பக்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள ‘திரு அண்ணாமலை’யை 14 கி.மீ., தொலைவு கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். பக்தர்களிடம், வழிப்பறி மற்றும் நூதன மோசடி என்பது தொடர்கிறது. வெளியூர்களில் குற்றச்செயலை செய்துவிட்டு, ‘சாது’க்கள் வேடத்தில் கிரிவலப் பாதையில் குற்றவாளிகள் தஞ்சமடைகின்றனர். இதேபோல், கிரிவலப் பாதையில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனையும் நடைபெறுகிறது.

கிரிவலப் பாதையில் நடைபெறும் குற்றச்செயலை கண்காணித்து தடுக்க, காவல் துறை அறிவுரையின்பேரில் இந்து சமய அறநிலையத் துறை (கோயில் நிர்வாகம்) சார்பில் சுமார் 130 கேமராக்களை பொருத்தியுள்ளன. பவுர்ணமி கிரிவல நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளின் நடமாட்டமும் எளிதாக அடையாளம் காணப்பட்டன. காவல் துறையின் விசாரணைக்கும் மற்றும் கிரிவலப் பக்தர்களின் பாதுகாப்புக்கும் அரணாக இருந்தன.

இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு கடந்த சில மாதங்களாக மங்கின. சாலை விரிவாக்கப் பணியின்போது, சுமார் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள கம்பங்கள் மீது லாரிகள் மோதியதில் சேதமடைந்துள்ளன. மேலும், பல இடங்களில் கேமராக்களின் முகப்பு பகுதி பல கோணல்களில் உள்ளன. இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. கிரிவலப் பாதையில் மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை கிரிவல பாதையில்
பூமியை நோட்டமிடும் கண்காணிப்பு
கேமராக்கள்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “கிரிவலப் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த கேமராக்கள் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கண்காணித்து பராமரிக்கப்படுகிறது. இதற்காக, தனி ஊழியர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். கிரிவலப் பாதையில் குற்றச் செயல்களை தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள்காவல் துறைக்கு பெரும்உதவியாக இருந்தன. பக்தர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தது.

தற்போது, கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்துள்ளது குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வசதியாக உள்ளது. செயலிழந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான், அச்சம் இல்லாமல் பக்தர்களால் கிரிவலம் செல்ல முடியும்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE