“இந்தி நடிகைக்கு அழைப்பு; ஆனால் குடியரசுத் தலைவருக்கு அழைப்பில்லை” - அமைச்சர் உதயநிதி பேச்சு 

By எஸ்.ஸ்ரீனிவாசகன்


மதுரை: “பாஜக என்னும் பாம்பு வீட்டுக்குள் நுழைவதை தடுக்க, அதிமுக என்னும் புதர், குப்பையை முதலில் அகற்ற வேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி பேசினார்.

மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பணமுடிப்புடன் கூடிய பொற்கிழி வழங்கி கவுரவப்படுத்தும் நிகழ்வு நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். கட்சியினருக்கு பொற்கிழி வழங்கி அமைச்சர் உதயநிதி பேசியது: “நான் முதலில் பொற்கிழி வழங்கியது மதுரையில்தான். இதற்கு அமைச்சர் பி.மூர்த்திதான் காரணம்.

இதை தமிழகம் முழுவதும் வழங்க விதை போட்டவர் அமைச்சர் மூர்த்தி. இளைஞரணி மாநில மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தினார். எதையும் பிரம்மாண்டமாக, மற்றவர்கள் முகம் சுழிக்காத வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர் மூர்த்தி. என் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவராக, உடன் பிறக்காத அண்ணணாக என்னுடன் பயணிக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 30 மாவட்டங்களில் ரூ.30 கோடியை பொற்கிழியாக வழங்கியுள்ளோம்.

கடந்த 20-ம் தேதி ஒரு மாநாடு மதுரையில் நடந்தது. மறு நாள் செய்தித்தாளில் அக்கட்சியின் கொள்கை, வரலாறு குறித்து செய்தி வரவில்லை. மாறாக புளி சாதம், சாம்பார் சாதம் நல்லா இருந்ததா என்பதே அது. வரும் டிச.17-ல் திமுக இளைஞரணி மாநாடு நடக்கிறது. ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த மாநாடு இருக்கும். ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் மதுரை அதிமுக மாநாடு.

நீட் தேர்வு ரத்து பற்றி ரகசியத்தை மதுரைக்கு வரும் உதயநிதியிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்கின்றார். நீட் எதிர்ப்பு தொடர்பாக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்போகின்றோம். உதயகுமார் இதில் கையெழுத்து இடுவாரா? நான் சவால் விடுகின்றேன். நீட்டை ஒழிக்க ஒரு உதயநிதி பத்தாது. எல்லாருடைய ஆதரவும் தேவை.

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அண்ணாவை பற்றி பாஜகவினர் பேசியதால் கோவம் வருகிறது. அண்ணா பேசிய அத்தனை கருத்துகளையும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். சனாதன சேற்றிலிருந்து மக்கள் வெளியேறாதது வருத்தம் அளிக்கிறது. இன்றைக்கும் சிலர் அந்த சேற்றை சந்தனம் என நினைக்கின்றனர். இதை நினைத்து வெட்கவும், வேதனையும் படுகிறேன் என அண்ணா சொன்னார். இதை சொல்ல செல்லூர் ராஜூவுக்கு தைரியம் உள்ளதா?

அதிமுக, பாஜக இடையில் உள்ளது உட்கட்சி பிரச்சினை. இதில் நாம் தலையிட முடியாது. டெல்லியிலிருந்து ஒரு போன் வந்தால் போதும். பிரதமரோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பேசினால் போதும். எல்லாமே மாறிப்போகும். அமலாக்கத்துறை வழக்கு உள்ள 8 முன்னாள் அமைச்சர்கள் வாயை திறக்கவில்லை. தற்போது யாரும், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது என அதிமுக கூறியுள்ளதாக இன்றைய தகவல்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் 10 நிமிடம் மட்டுமே பேசினேன். நான் பேசியதை பொய்யாக திரித்து பொய் செய்தியை பரப்பி பிரதமர் மோடி வரை பேசினார். இந்த இயக்கம் துவங்கப்பட்டதே சனாதனத்தை ஒழிக்கத்தான். அது ஒழிக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும். புதிய மக்களவை கட்டிடம் திறக்கப்பட்டபோது சாமியார்கள் பலரை தனி விமானத்தில் அழைத்து சென்றனர்.

இவர்களுக்கும் மக்களவை கட்டிடத்திற்கும் என்ன தொடர்பு. ஆனால் நாட்டின் முதல் பிரதிநிதியான ஜனாதிபதியை அழைக்கவில்லை. அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர். மேலும் கணவரை இழந்தவர் என்பதால் அவரை அழைக்கவில்லை. நேற்று மக்களவையில் புதிய சட்ட மசோதா வந்தபோது இந்தி நடிகையை எல்லாம் மக்களவைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஜனாதிபதியை அழைக்கவில்லை. இதைத்தான் சனாதனம் என்கிறோம். இதைத்தான் ஒழிக்க வேண்டும்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்டணமில்லா பேருந்து வசதியால் மகளிருக்கு மாதம் ரூ.1000 சேமிப்பு. 17 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து மக்களிடம் தொடர்ந்து பேச வேண்டும். நிராகரிக்கப்பட்டவர்களில் தகுதியுள்ள அனைவரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவர். திமுகவில் கருணாநிதி குடும்பம்தான் வாழ்வதாக பிரதமர் சொல்கிறார். ஒட்டுமொத்த தமிழகமும் கருணாநிதி குடும்பம்தான்.

9 ஆண்டு பாஜக ஆட்சியில் என்ன செய்தனர். சொன்னது எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானி. அவரது ஆட்சியில் அதானி குடும்பம் மட்டும்தான் வாழ்ந்துள்ளது. பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” இவ்வாறு உதயநிதி பேசினார். தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன், எம்எல்ஏ. ஆ.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக உதயநிதிக்கு பல்லாயிரம் பேர் திரண்டு வரவேற்பளித்தனர்.

முன்னதாக மேடையில் குட்டி கதை சொன்ன உதயநிதி, ‘‘ஒரு வீட்டுல பாம்பு திடிரென வந்துள்ளது. அப்போது கம்பை எடுத்து பாம்பை அடிக்கிறோம். அது ஓடி விடுகின்றது. 2 நாள் கழித்து மீண்டும் பாம்பு வீட்டுக்குள் வந்தது. எப்படி வந்தது ளன பார்த்தோம் என்றால் வீட்டின் அருகே குப்பையும், புதரும் இருந்துள்ளது. அதில் ஒழிந்திருந்த பாம்புதான் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளது. இதனை தற்போதைய அரசியலோடு ஒப்பீட்டு பார்க்க வேண்டும். இதில் வீடு என்பது தமிழ்நாடு. பாம்பு என்பது பாஜக. குப்பை, புதர் என்பது அதிமுக. பாம்பை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் குப்பை, புதரை அகற்ற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE