காவிரி விவகாரத்தில் தமிழக கோரிக்கையை கர்நாடகம் எக்காலத்திலும் ஏற்றது இல்லை: துரைமுருகன்

By செய்திப்பிரிவு

சென்னை: "காவிரி விவகாரத்தில் இதுவரையில், தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகம் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொண்டது இல்லை. நாம் பெற்றிருக்கிற உரிமை முழுவதும் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற உரிமைகள்தான். அதேபோல வரும்காலத்திலும் பெறுவோம்" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "காவிரி நீர் விவகாரத்தில், தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் சார்பில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்தோம். அப்போது அவரிடம், கர்நாடகத்தில் தண்ணீர் இருக்கிறது. பல்வேறு அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்துள்ளனர் என்று நாங்கள் கூறுகிறோம்.

தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறுகிறது. உண்மையில் கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது, இல்லை என்பதை கண்டறிந்து சொல்லக்கூடிய அதிகாரம், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்குத்தான் உண்டு. அந்த காவிரி ஒழுங்காற்றுக் குழு, அவர்களுடைய ஆட்களை வைத்து தண்ணீர் இருப்பை ஆய்வு செய்துவிட்டு, கடந்த 13-ம் தேதி, விநாடிக்கு 12,400 கனஅடி தண்ணீர் திறந்துவிடலாம் என்று கூறினார்கள்.

அவ்வாறு கூறியிருந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவே, திடீரென 5000 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றனர். காவிரி ஒழுங்காற்றுக் குழு சரியாக நடந்து கொள்கிறதா? அல்லது கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கிறதா என்பதை கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் நான் கேட்டேன். எதற்காக அவரிடம் கேட்கிறோம் என்றால், அவர் மத்திய அரசை சேர்ந்தவர். இதுகுறித்து விசாரித்து சொல்வதாக அவர் தெரிவித்தார்.

காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவரும் வந்திருந்தார். அவரிடமும் நான் கேட்டேன். 13-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பிக்கிறீர்கள், அடுத்து ஒரு உத்தரவு போடுகிறீர்களே எப்படி? என்றேன். அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவரே சொன்னாராம், கர்நாடகத்துக்கு குடிக்க தண்ணீர் தேவைப்படுகிறது என்று. தமிழகத்துக்கும்தான் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒழுங்காற்றுக் குழுவில் உள்ள உறுப்பினரே இவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது. அதனால்தான் அந்த குழு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று கூறுகிறோம்.

எனவே, நாளை இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் இதுபற்றி எல்லாம் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். நாளை அவரும் பேசுவதாக கூறியிருக்கிறார்.

இதுவரையில், தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகம் எந்த காலத்திலும் ஏற்றுக் கொண்டது இல்லை. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கேட்டபோது மறுத்தனர். பலவருட போராட்டங்களுக்குப் பின்னர், வி.பி.சிங் பிரதமராக வந்தபோது நடுவர் மன்றம் அமைத்துக் கொடுத்தார். அதில், ஒரு இடைக்கால உத்தரவு ஒன்று கேட்டோம். அதற்கும் கர்நாடகா மறுப்பு தெரிவித்தது. நடுவர் மன்றத்துக்கு அந்த அதிகாரமே இல்லை என்றனர். அதன்பின்னர் உச்ச நீதிமன்றம் சென்று, 75 டிஎம்சி தண்ணீர் பெற்றோம்.

அந்த உத்தரவு வந்தபின்னர், அதை அரசிதழில் வெளியிட கர்நாடகா மறுத்தது. அதற்கு உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றோம். இந்த விவகாரத்தைக் கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவரே நியமிக்காமல் இருந்தனர். கடைசியில் அதற்கு உச்ச நீதிமன்றம் சென்றோம்.

காவிரியின் நீண்ட வரலாற்றில், நான் ஆரம்பம் முதல் இருக்கிறவன். இந்த விவகாரத்தில், எதையும் நாம் கேட்டது போல, ஒரு துரும்பைக் கூட அசைந்து கொடுத்தது அல்ல கர்நாடகம். நாம் பெற்றிருக்கிற உரிமை முழுவதும் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற உரிமைகள்தான். அதேபோல வரும்காலத்திலும் பெறுவோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தனர். நாளை காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை சந்தித்துப் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE