மதுரையில் அரசு மருத்துவமனை, கூர்நோக்கு இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் அரசு மருத்துவமனை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.

மதுரையில் பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்க இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். அவர், நேற்று நள்ளிரவில் மதுரை காமராசர் சாலையில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லம் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடை மற்றும் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார். மேலும், இல்லத்திலுள்ள சமையலறை, சிறுவர்களுக்கான படுக்கை, கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா என, ஆய்வு செய்த அமைச்சர், சிறார்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுவிக்கப்படும் போது, குற்றச்செயல்களில் ஈடுபடாத வகையில், இயல்பு வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகள், உளவியல் பற்றி பாடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அமைச்சர் பி. மூர்த்தி உடனிருந்தார். இதைத்தொடர்ந்து மதுரை துவாரகா மகாலில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்ட பயனாளிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000/- உரிமைத் தொகை பெறும் வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி , சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலர் தாரேஸ் அகமது, மதுரை ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் எம்எல்ஏக்கள் கோ.தளபதி ஆ.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஜப்பான் நாட்டின் 'ஜைக்கா' நிறுவனம் உதவியுடன் அமையும் புதிய டவர் பிளாக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்து, பணி விவரங்களை கேட்டறிந்தார்.

இதற்கிடையில், விபத்தால் பாதிக்கப்பட்ட மதுரை ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரனை நேரில் சந்தித்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ரூ. 2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரைக்கு மாலையில் சென்ற அமைச்சர், அங்கு அமைக்கப்படும் ஜல்லிக்கட்டு அரங்க கட்டுமான பணியை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE