திருவண்ணாமலை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலையை தெரிந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களில் மகளிர் குவிந்தனர்.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் கடந்த 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, 4 ஆயிரத்து 500 மகளிருக்கு உரிமைத் தொகை பெறுவதற்கான பிரத்யேக ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்ட மகளிருக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் பணம் சென்றடையவில்லை என கூறப்படுகிறது. மேலும், மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்து தகுதியானவர்களா? அல்லது நிராகரிக்கப்பட்டவர்களா? என தெரியாமல் லட்சக்கணக்கானவர்கள் காத்திருக்கின்றனர். இதேபோல், மகளிர் உரிமைத் தொகை வந்தடைந்த மகளிரின் வங்கிக் கணக்கில் பணம் பிடித்தம் செய்துள்ள நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
16 உதவி மையங்கள்... இக்குறைகளுக்கு தீர்வுகாண, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் என 16 இடங்களில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையங்கள், நேற்று முதல் செயல்பட தொடங்கியதும், முறையீடு செய்வதற்காக அதிகளவில் மகளிர் கூடினர்.
இதனால், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உதவி மையம் உட்பட பல இடங்களில் சர்வர்கள் ஸ்தம்பித்தன. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மகளிரின் கோரிக்கை மற்றும் மனுக்கள் பெறப்பட்டன. சர்வர் திறனை மேம்படுத்த வேண்டும் என மகளிர் வலியுறுத்தியுள்ளனர்.
1100-ல் புகார் தெரிவிக்கலாம்... முன்னதாக உதவி மையங்கள் குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க தவறியதால் உரிமைத் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. அஞ்சலக வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மகளிருக்கு மணியார்டர் மூலம் உரிமைத் தொகை அனுப்பப்படுகிறது. வங்கியில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை உடனடியாக எடுக்க வேண்டும் என வெளியான தகவல் தவறானது. உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்தால் 1100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
30 நாட்களில் மேல்முறையீடு... வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதி இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து பதிவு செய்துள்ள கைபேசிக்கு செப்டம்பர் 19-ம் தேதி (நேற்று) முதல் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பம் ஏற்கப்படஇல்லை என குறுந்தகவல் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும். கட்டணம் கிடையாது. இதன் மீது கோட்டாட்சியர் மூலம் அடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
விண்ணப்பங்களின் நிலை பற்றி அறிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற இணையதளம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்’’ என்றார்.
வதந்திகளை புறந்தள்ளுங்கள்: மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள உதவி மையங்களுக்கு நேரில் சென்று, விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். உரிமைத் தொகை பெற அனுமதிக்கப் பட்டவர்கள் தங்களது கைபேசி எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றில் மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் விரைவில் ஏற்படுத்தி தரப்படும்.
விண்ணப்பிக்காத மகளிரும், விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் விரைவில் அளிக்கப்படும். இதற்கான செயல்திட்டம் வகுக்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான ஒரு மகளிர் கூட விடுபடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனவே, தேவையற்ற வதந்திகளை புறந்தள்ளி அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago