வருவாய்துறை பணிகள் நடக்காததால் புதுவை சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ, ஆதரவு எம்எல்ஏ தர்ணா

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வருவாய்த்துறை பணிகள் நடக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவை வளாக படிக்கட்டில் அமர்ந்து பாஜக எம்எல்ஏ, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று பத்து நாட்களில் பணிகளை முடித்துத் தருவதாகக் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இச்சூழலில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்காக சட்டப்பேரவை கூடும் நாளில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து பேரவைத் தலைவர் செல்வத்திடம் கடிதம் அளித்திருந்தார். புதுவை சட்டப்பேரவை புதன்கிழமை காலை கூடியது. காலை சட்டப்பேரவைக்கு வந்த பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் சட்டப்பேரவை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

அப்போது கல்யாணசுந்தரம் எம்எல்ஏ கூறியதாவது, "காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக மனைப்பட்டா கோரி வருகிறோம். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை செயலரான ஆட்சியர் வல்லவனை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்எல்ஏக்களை சந்திப்பது இல்லை. அவர் முதல்வர் அருகிலேயே அமர்ந்துகொள்கிறார். எம்எல்ஏக்கள் பணிகளை ஆட்சியர் செய்வதில்லை" என குற்றம்சாட்டினார்.

சிறிது நேரத்துக்குப் பின்பு பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் சட்டப்பேரவைக்கு வந்தார். அவரும் கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாக குற்றம்சாட்டினார். இச்சூழலில் பேரவைத்தலைவர் செல்வம் சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்களை சமரசம் செய்து, தனது அறைக்கு கையோடு அழைத்துச் சென்றார். பத்து நாட்களில் தீர்வு காண்பதாக உறுதி தந்தார். இதனால் எம்எல்ஏக்கள் தர்ணா அரைமணி நேரத்தில் முடிவடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE