நாற்று நடவு, கரும்பு வெட்டும் பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களை நம்பியிருக்கும் ஈரோடு விவசாயிகள்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நெல் நடவு, கரும்பு வெட்டுதல் போன்ற விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பணிகளை மேற்கொள்ள வடமாநிலத் தொழிலாளர்களை நம்ப வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

கொடிவேரி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்துக்குட்பட்ட இந்த நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மூன்று பாசனங்களுக்கும் நீர் திறப்பு, சாகுபடி, அறுவடை காலங்கள் வேறுபட்டாலும், விவசாயப் பணிகளுக்கான தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்களின் ஆதிக்கம் வியாபித்துள்ள நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், வடமாநிலத் தொழிலாளர்களை நம்பியே வேளாண்மைத் தொழிலும் மாறி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனத்தில் நெல் நடவுப்பணிகள் தொடங்கவுள்ள நிலையில், நடவுப்பணிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தீர்க்கும் வகையில், ‘நெல் நடவு செய்ய வடமாநிலத் தொழிலாளர்கள் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்’ எனக் குறிப்பிட்டு, தொலைபேசி எண்ணுடன் முகவர்கள் விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கொடிவேரி பாசனசபைத் தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, கரும்பு வெட்டுதல், நெல்நடவு உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு, 30 சதவீதம் உள்ளூர் தொழிலாளர்கள் கிடைத்து வந்தனர். மீதமுள்ள 70 சதவீதம் தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து ஒப்பந்ததாரர்கள் மூலம் குழுவாக வந்து பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் வருகை குறைந்து போனது.இந்நிலையில், உள்ளூர் தொழிலாளர்கள் அரசின் 100 நாள் வேலைத்திட்டப் பணிகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டினர். இதனால், மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பை வடமாநிலத் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தொடக்கத்தில் ஆண் தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வந்த நிலையில், தற்போது பெண்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களும் விவசாயிகள்தான் என்ற எண்ணத்தோடு, அவர்களை மரியாதையுடன் நடத்த தமிழக விவசாயிகள் முன்வர வேண்டும்.

அவர்களுக்குரிய கூலி, பாதுகாப்பு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும். வட்டாரம் வாரியாக வடமாநிலத் தொழிலாளர்களைப் பதிவு செய்து, விவசாயத் தேவைக்கு ஏற்ப அவர்களை அரசே அனுப்பி வைத்து, ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுவது, பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு ஏக்கரில் நெல் நடவுக்கு உள்ளூர் தொழிலாளர்கள் ரூ.5,000 கூலியாக கேட்கும் நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் ரூ.3,500 மட்டும் பெற்று அப்பணியை முடித்துத் தருகின்றனர். இவ்வாறு நடவுப்பணிக்கு வரும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர், ஒடிசா மாநிலம் மகாநதி பாயும் நிலங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் என்பதால், விவசாயிகள் தெரிவிக்கும் இடைவெளியில் நெல் நாற்றுகளை நட்டுத் தருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களில் பலர் அங்கிருந்து குழுவாக டிராக்டர்களில் வந்துள்ளனர். சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், இவர்களை கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். உள்ளூர் தொழிலாளர்களை விட ரூ.200 குறைவாக, டன்னுக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை கூலி பெற்று, இவர்கள் கரும்பு வெட்டித் தருகின்றனர்.

தற்போதைய நிலையில், ஈரோடு மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்கு வடமாநிலத் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தே காணப்படுகிறது. விவசாய பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களை நடவுப் பணிக்கு ஏற்பாடு செய்து வரும் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் கூறியதாவது: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, மாயவரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்று நடவுப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், வடமாநிலத் தொழிலாளர்களை இந்த பணிக்கு ஏற்பாடு செய்து தருகிறேன். இதற்காக, ஏக்கருக்கு ரூ.4,500 கூலியாக பெறுகிறோம். அனைவரும் வேலை தெரிந்த தொழிலாளர்கள் என்பதால், நடவுப்பணியை விரைந்து முடித்து விடுகின்றனர். இதோடு, நெல் அறுவடை இயந்திரமும் வாடகைக்கு கொடுத்து வருகிறோம். 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு பணி இருந்தால், வெளியூர்களுக்கும் வடமாநிலத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது இவரின் கட்டுப்பாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், டெல்டா மாவட்டங்களில், நெல் நடவு மற்றும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களின் உடல் பலம் குறைந்து இருப்பதாக கூறும் விவசாயிகள், கடப்பாரை, மண்வெட்டி பயன்படுத்தி வேலை செய்யும் திறன் மிக்க தொழிலாளர்கள் மிகவும் குறைந்து விட்டதாக வேதனைப்படுகின்றனர்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பு விவசாயம் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது எதிர்காலத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தொழில்துறையினரிடையே தொடர்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE