சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மோசமாக உள்ளதாக புகார் - நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, புறநகர் மற்றும் இதர மாவட்டங்களில் சாலைகள் மோசமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படும் நிலையில், அவற்றைத் தரமானதாக அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். அதேபோல். இந்த ஆண்டும் நாம் எதிர்வரும் பருவமழைக் காலத்தை திட்டமிட்டு கையாள வேண்டும்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்துக்கு 44.3 செ.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கிறது. தமிழகம், வடகிழக்கு பருவமழைப் பொழிவையே அதிகம் சார்ந்துள்ளதால், மழையின் பலன்களை அதிகமாகப் பெறுவதோடு, அதனால் ஏற்படும் இழப்பு,சேதம் ஆகியவற்றைக் குறைப்பதும் மிகவும் அவசியமாகிறது.

கடந்த ஆண்டுகளில், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து, சேதத்தைக் குறைக்கவும் மற்றும் பாதிப்புகளைத் தவிர்க்கவும் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத் துறை, நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.716 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக 4,399 ஆக இருந்த பேரிடர் பாதிப்பு பகுதிகள் 3,770 ஆக குறைந்துள்ளது.

பருவமழை காலத்தில் ஏற்படும் புயல், வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு தயாராக வைத்திருக்க வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவதுடன், கரைகளையும் வலுப்படுத்த வேண்டும். அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்தின்போது பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பாதிக்கப்படும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்டறிந்து, பல்துறை மண்டல குழுக்கள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாக எனக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாவதோடு, சிறு விபத்துகள் ஏற்படும் செய்திகளும் வருகின்றன. இது ஏற்புடையதல்ல.

மழைநீர் வடிகால், குடிநீர் வாரியம், மெட்ரோ ரயில், மின்வாரியப் பணிகள் காரணமாக மட்டுமின்றி, பழைய சாலைகள் போதிய பராமரிப்பில்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்தநிலை மாற்றப்படவேண்டும்.

நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இதை வெறும் அறிவுரையாக நான் கூறவில்லை. அமைச்சர்களும், அரசு செயலர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றக் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன்.

இனி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைத்து மாவட்டங்களிலும், நேரடியாக ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை முடிக்கவேண்டும் என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகராட்சியிலும், பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து, உணவு தயாரிக்கும் கூடங்களை தயார் நிலையில் வைக்க வேண் டும். பேரிடர்களின்போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE