நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் பரிதாப உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரைத்துறையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் வழக்கம்போல படுக்கை அறைக்கு உறங்க சென்றனர். மூத்த மகளும் தனக்கான அறைக்கு சென்றார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கண் விழித்த விஜய் ஆண்டனி, தனது மகளின் அறைக்கு சென்ற பார்த்தபோது, அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி கதறி அழுதார். பின்னர், தனது உதவியாளர் உதவியுடன் மகளை மீட்டு கீழே இறக்கி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு காலை 6.10 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து மதியம் 12.40 மணியளவில் சிறுமியின் உடல், விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, தடயவியல் துறையினர் விஜய் ஆண்டனி வீட்டுக்குச் சென்று போலீஸார் உதவியுடன் சிறுமியின் அறை முழுவதும் ஆய்வு செய்தனர். சிறுமி பயன்படுத்திய செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மன அழுத்தம்: போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சிறுமி சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தம் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை குஷ்பு, நடிகர்கள் சந்தானம், மன்சூர் அலிகான், நகுல் உள்பட பல திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உருக்கமான கடிதம்: இதற்கிடையில், சிறுமியின் அறையில் இருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில், குடும்பம் மற்றும் நண்பர்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டிருந்ததாகவும், அது எப்போது யாரால் எழுதப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், சிறுமியின் உடல் அடக்கம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று நடைபெறுகிறது.

வைரலாகும் வீடியோ: இதற்கிடையே, தற்கொலை தொடர்பாக விஜய் ஆண்டனி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அதில், ‘‘எனக்கு 7 வயதாக இருக்கும்போது என் தந்தை தற்கொலை செய்து கொண்டார். கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு என் தாய் பட்ட கஷ்டங்களால் அந்த வலி என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

நிறைய குழந்தைகளும் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்கள் உங்களை நேசியுங்கள்’’ என அதில் கூறியுள்ளார்.

விரக்தி, மனச்சோர்வு, துன்பம், தற்கொலை எண்ணம் உள்ளவர்கள், அதில் இருந்து விடுபடுவதற்கு சிநேகா அமைப்பை 044-24640050 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

போலீஸ் அதிகாரிகள் உருக்கமான வேண்டுகோள்: பாதுகாப்பு பணிக்காக நடிகர் விஜய் ஆண்டனியின் வீடு முன்பு நின்றிருந்த போலீஸாரும் கண்கலங்கிய நிலையில் இருந்தனர். அப்போது நம்மிடம் பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ‘ ‘எந்த குடும்பமும் தாங்க முடியாத இழப்பு இது. சோகத்தில் உடன் நிற்கவும், பணி நிமித்தமாகவும் போலீஸார், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் இங்கே வந்திருக்கிறோம். பிரபலங்கள் வீடு என்றால் அங்கே சில அத்துமீறல்கள் அரங்கேறுகின்றன. முண்டியடித்து படம் பிடிப்பதும், வீட்டுக்கு வருபவர்களிடம் மைக்கை நீட்டி பேசச் சொல்லி நிர்பந்திப்பதும் ஏற்புடையதல்ல. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வருபவர்களையும் இந்த அத்துமீறல் வேதனைப்படுத்துவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதோடு, தனி மனித சுதந்திரத்தை பறிப்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல. பிரபலங்களின் வீடுகளில் நிகழும் துக்கத்தில், கருத்துகளை பதிவு செய்ய விரும்பும் நபர்களை தனியே அழைத்து சென்று பத்திரிகையாளர்கள் பதிவு செய்யலாம். இதை போலீஸ் தரப்பு வேண்டுகோளாகவே வைக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE