மீண்டும் வேலை வழங்க கோரி பணி நீக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் கோவை மேயரிடம் மனு

By செய்திப்பிரிவு

கோவை: மீண்டும் வேலை வழங்க கோரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மேயரிடம் நேற்று மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சிலர் அளித்த மனுவில், ‘‘கூட்டுத் துப்புரவு (மாஸ் கிளீனிங்) பணியாளர்களாகிய நாங்கள், ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தோம். கரோனா காலத்தில் கொடிசியா சிகிச்சை மையம், இஎஸ்ஐ மருத்துவமனையில் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.

தற்போது எங்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.எங்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.

கூட்டத்தில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சீரான முறையில் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 33 மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE