“மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகின்றனர்” - ஆர்.பி.உதயகுமார் கருத்து

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், “பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாலையில் சிறப்பு வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 100 அரிசி மூட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியது: ''தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வலதுபுறத்தில் கே.பழனிசாமியும், இடதுபுறத்தில் நட்டாஜியும் அமர்ந்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் கிடைக்காத கவுரவமும், அங்கீகாரமும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கே.பழனிசாமிக்கு தேசிய கூட்டணியில் கிடைத்துள்ளது.

இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கம், கேரளாவில் கூட்டணி சேரமாட்டோம் என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியின் கருத்து வேறுபாடு உள்ளது. இப்படி முரண்பாடு எல்லோரிடத்திலும் உள்ளது. கே.பழனிசாமி நிதானத்தோடு, பெருமையாக விட்டுக் கொடுத்து வருகிறார். அண்ணாவின் பொன்மொழியான எதையும் தாங்கும் இதயம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற அண்ணாவின் அமுதமொழிகளை கடைப்பிடித்து வருகிறார்.

தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் நினைக்கிறார்கள். அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சராக கே.பழனிசாமி வரவேண்டும் என எதிர்பார்த்து வருகிறார்கள். திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். திமுகவை அகற்றப்பட வேண்டும். தலைவராக வர நினைப்பவர்கள் தலைமை தாங்கும் பொழுது நிதானம், பொறுமை, சகித்தன்மை என கடைப்பிடித்தால் தான் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பாஜக மாநிலத் தலைவரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ஆர்.பி.உதயகுமார் திடீரென்று மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகிறார்கள் என கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE