பருவமழை முன்னெச்சரிக்கை: உயிரிழப்பு, பொருள் சேதங்களைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவமழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.19) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "வடகிழக்குப் பருவமழை காலத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய பல்வேறு ஆயத்தப் பணிகள் குறித்து நம்முடைய தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் எடுத்துரைத்தார்கள். தொடர்ந்து துறையினுடைய அதிகாரிகளும் அது குறித்து விளக்கம் தந்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், சிறப்பாகத் திட்டமிட்டு, இந்த ஆண்டும் நாம் எதிர்வரும் பருவமழைக் காலத்தை அதேபோன்ற முறையை கையாளவேண்டும்.

இந்தப் பேரிடர்களை எதிர்கொள்ளப் பல்வேறு அணுகுமுறைகளைப் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், தகவல் பரிமாற்றத்தைக் கூர்மைப்படுத்துதல், பணியாளர்களுக்கான பேரிடர் நிர்வாகப் பயிற்சி வழங்குதல், பொதுமக்களைத் தயார்படுத்துதல், துல்லியமான வானிலை அறிக்கைகளைப் பெற நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதுதான் பேரிடர் மேலாண்மை.

அந்தவகையில், தமிழ்நாடு அரசு ஒரு முழுமையான அணுகுமுறையின் மூலம் பேரிடர்கள், அபாயம் மற்றும் பாதிப்புகள் குறித்த தரவுகள் மற்றும் வரைபடங்களைத் தயாரிப்பதோடு, பேரிடர் அபாயத்தைக் குறைத்திடத் தணிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின், அபாயத்தை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நமது அரசானது, அனைத்து விதமான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொண்டு, அதன் மூலம் பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடிய திறன்மிக்க சமூகத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.

இதன்படி, பேரிடர் மேலாண்மையின் அனைத்து அம்சங்களான நிறுவன மற்றும் நிதி ஏற்பாடுகள், பேரிடர் தவிர்ப்பு, தணிப்பு, ஆயத்தம், மீட்பு, நிவாரணம், சீரமைப்பு, மறுவாழ்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையை நமது அரசு மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. நமது பேரிடர் மேலாண்மை இயக்கத்தில் முக்கியமான மூன்று கொள்கைகளைப் பின்பற்றி வருகிறோம்:

(1) அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளை குறைத்தல்;
(2) உயிரிழப்பு, பொதுச் சொத்துகள் மற்றும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளின் சேதம் ஆகிவற்றைத் தவிர்த்தல்;
(3) அரசு உருவாக்கிய பொருளாதார மற்றும் வளர்ச்சி ஆதாயங்களை இழக்காமல் இருத்தல்;

இவைதான் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கைகளின் சுருக்கம். அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு, 443.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில், 48 விழுக்காடு.

நமது மாநிலம் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கிடைக்கப் பெறும் மழைப்பொழிவை அதிகமாகச் சார்ந்துள்ளதால், பருவமழையின் பலன்களை அதிகமாகப் பெற, அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது.

ஏற்கெனவே கடந்த 14-9-2023 அன்று, தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சேதத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

* கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட புயல், கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து, பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 716 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக 4399 ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3770 ஆக குறைந்துள்ளன.

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

* பேரிடர் குறித்த எச்சரிக்கை தகவல்கள் கடலோர பகுதிகளில் 424 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை கருவிகள், TNSMART செயலி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை, அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு உரிய காலத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.

* வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

* பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாருவதோடு, கரைகளையும் வலுப்படுத்த வேண்டும். அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கப்பட வேண்டும்.

* மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். பள்ளிகளில் மாணவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

* பருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருத்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்

* மாவட்ட ஆட்சியர்கள், கன மழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை பல்துறை மண்டல குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

* சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல.

மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை மாற்றப்படவேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன்.

இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்பதை கண்டிப்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

* ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்டந்தோறும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஒத்திகைப் பயிற்சிகள் நடத்துவதோடு, பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைத்திடவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவமழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்