சீமான் வழக்கு போட்டால் ஆவணங்களுடன் நிரூபிப்பேன்: நடிகை விஜயலட்சுமி

By செய்திப்பிரிவு

சென்னை: நான் ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கே வராது என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, "சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன். வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள். பாலசுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை அனுப்பி வைத்தார் சாட்டை துரைமுருகன். புகாரை வாபஸ் பெற்றுவிட்டு எனது அக்காவுடன் கிளம்பி போக சொன்னார்கள். சாட்டை துரைமுருகனிடம் உள்ள செல்போன் உரையாடல் விவரங்களை எடுத்தாலே சீமான் என்னிடம் பேசியது தெரியும். நான் ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கே வராது” என தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி: திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆக.28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலம் அளித்தார்.தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12-ம் தேதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு 2-வது முறையாக போலீஸார் சம்மன் வழங்கினர்.இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கினார். எழுத்துபூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார்.

மேலும், "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை" என்றும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

காவல்துறையினர் அனுப்பிய இரண்டாவது சம்மன் தொடர்பாக, சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவரது மனைவி கயல்விழியுடன் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE