விலைவாசியைவிட அதிக பலனை தருவதே சிறந்த முதலீடு: ‘எம்எப் மந்த்ரா’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

By செய்திப்பிரிவு

கோவை: பணத்தை முதலீடு செய்து கிடைக்கும் வருமானம் விலைவாசியை விட அதிகமான பலனை தர வேண்டும். அதுவே சிறந்த முதலீடு என, சென்னை பிரகலா வெல்த் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ மற்றும் சென்னை மிரே அசெட் (Mirae Asset) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பில் ‘எம்எப் மந்த்ரா’, முதலீடும்,முன்னேற்றமும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை இந்திய தொழில் வர்த்தகசபை அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்வில் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிநாத் பேசியதாவது:

மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட்நிறுவனம் இந்திய அளவில் செயல்படும் தலைசிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாகும். சில்லறை வணிகமுதலீட்டாளர்களின் ரூ.1.5 லட்சம்கோடி நிதியை மேலாண்மை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் 23 கிளைகள் உள்ளன. கோவையில் விரைவில் கிளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். நம் கையில் பணம் இருந்தால் முதலில் செலவு செய்வோம். அடுத்து சேமிப்பு குறித்து யோசிக்க தொடங்குவோம். சேமிப்பு பழக்கம் வீட்டில் இருந்து (அஞ்சறை பெட்டியில் தாய் சேமித்த விதம்) தான் தொடங்கியது.

பணி ஓய்வு பெற்ற பின் வருமானத்துக்கு வழிவகை ஏற்படுத்தவும், கரோனா போன்ற அவசர காலங்களில் பயன்படுத்தவும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காகவும் சேமிப்பது அவசியம். இன்று நாம் ரூ.100 சேமித்து வைத்திருந்தால் பத்தாண்டுகளுக்கு பின் அதே மதிப்பு இருக்காது. கடந்த2013 பிப்ரவரி மாதம் இருந்த 100 ரூபாயின் மதிப்பு 2023 பிப்ரவரியில் ரூ.59-ஆக குறைந்துள்ளது. முதலீடு செய்யும் பணம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உதவி செய்தால் தான் நமக்கு உண்மையில் பயன்தரும். அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக லாபம் பெறலாம். குறைவான ரிஸ்க் எடுத்தால்அதற்கேற்ப லாபமும் குறையும். பணி ஓய்வு பெற்ற பின் உதவும் முதலீட்டு திட்டங்களுக்கு இளம் வயதில் மேலை நாடுகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் தலைகீழாக உள்ளது. திட்டமிட்டு செயல்பட்டால் சிறந்த முறையில் லாபம் பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரகலா வெல்த் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன் பேசியதாவது: கடந்த காலங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு உதவி செய்துஆளாக்குவார்கள். பின் அவர்கள்பெற்றோருக்கு உதவி செய்வார்கள். இன்றைய வாழ்க்கையில் 45வயதுடையவர்கள் நமது பெற்றோர்,நமக்கு மற்றும் நம் குழந்தைகளுக்கு என அனைத்துக்கும் உதவி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அதிக ரிஸ்க் எடுப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. சந்தை சார்ந்த அபாயம் தான் முதலீட்டாளர்கள் எடுக்கும் ரிஸ்க் ஆகும். இன்று 30 வயதுநபர் மாதம் ரூ.30 ஆயிரம் செலவிடும்போது 30 ஆண்டுகளுக்கு பின் 60-வது வயதில் மாதம் ரூ.1.75 லட்சம் தேவைப்படும்.

சேமிப்பு என்பது முதலீடு கிடையாது. பணத்தை முதலீடு செய்து வருமானம் கிடைத்து விலைவாசியை விட அதிகமான பலனை தர வேண்டும். அதுவே சிறந்த முதலீடு ஆகும். முதலீடு என்பது ஒழுக்கத்தை கொண்டு வரும். சிறுதுளி பெருவெள்ளம் போல சேர்ந்து கொண்டே செல்லும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எழுத்தாளரும், பொருளாதார வல்லுநருமான சோம வள்ளியப்பன் பேசும்போது,‘‘பொதுவாக சந்தை எப்படி இருக்கிறது என்பது குறித்துயாரும் கேட்பதில்லை. காரணம் சந்தை நன்றாக உள்ளது. உலகளவில் முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா உள்ளது. ஜிடிபி சிறப்பாக உள்ளது என்பது உள்ளிட்டவை இதற்கு சான்றாகும். நல்ல நிறுவனம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்தால் பயன் பெறலாம்” என்றார். நிகழ்வில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE