பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை விற்க அனுமதி இல்லை: தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை

By கி.மகாராஜன் 


மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகளை விற்க அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: போலீஸாரும், வருவாய் அதிகாரிகளும் விநாயகர் சிலைகளை விற்கக் கூடாது என உத்தரவிட்டு எனது கடைக்கு சீல் வைத்தனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. இதுகுறித்து போதுமான விளக்கம் அளித்தும் சிலைகளை விற்க அனுமதிக்கவில்லை என கூறியிருந்தார்.

இம்மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது, மனுதாரர் அனுமதிக்கப்பட்ட அளவில்`பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இச்சிலைகளை வாங்குவோர் வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்களில் வைக்கலாம். ஆனால், நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. அதேநேரத்தில் `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகள் விற்பனையை அதிகாரிகள் தடுக்க முடியாது. மனுதாரர் சிலைகள் வாங்குவோரின் விவரங்களை பதிவிட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர், உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அதில், மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் களிமண்ணால் மட்டுமே சிலைகளை செய்திருக்க வேண்டும். `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' பயன்படுத்தி தயாரிக்க அனுமதி இல்லை எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி. பரத சக்கரவர்த்தி அமர்வு விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா. கதிரவன் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை ஏன் பின்பற்றவில்லை. விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை. எல்லாமே விஷம்தான். அமோனியம் மெர்குரி போன்று `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' நச்சுப் பொருள்தான். `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகளை விற்க அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE