மதுரை, திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

மதுரை/திருச்சி: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.34 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரை விமான நிலைய அறை எண் 7-ல் உள்ள கழிப்பறையில் சிறிய அளவில் பார்சல் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. சுங்கத் துறையினர் அதைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் காலை துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் இந்தத் தங்கக் கட்டிகளைப் பயணிகள் கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிகாரிகளின் கெடுபிடியால் கழிப்பறைக்குள் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. கடத்தியவர்கள் யார் என்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

இதேபேன்று, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, பயணி ஒருவரின் உடைக்குள் ரூ.1.14 கோடி மதிப்பிலான 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE