''விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு நான் பேசியது கிடையாது'' - சீமான் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: "நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார். விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவு செய்து வெளியிடுபவர் தானே, நான் பேசியதாக கூறுவதை ஏன் வெளியிடவில்லை? சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாகவும், சீமானுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகவும் கூறியிருந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நிறைய பொய்கள் சொல்லும்போது. அதை ஒரு பொய்யாக கூறிச் சென்றுள்ளார். நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார். விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவு செய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை? கம்ப்ரமைஸ், சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது.

காவல்துறை என்ன எனக்கு ஆதரவாக வேலை செய்துள்ளது? 2011-ல் இந்த குற்றச்சாட்டை விஜயலட்சுமி கொடுத்தபோது, இன்று விசாரணைக்கு அழைக்கும் காவலர்கள், காவலர்களாக இருந்தார்களா? இல்லையா? அவர்களில் யாரும் இன்றைக்கு வேலைக்குச் சேர்ந்தவர்கள் இல்லையே? அப்போது என்னை விசாரிக்காமல் என்ன செய்தனர்? என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் பத்திரிகையாளர்கள்தானே தவிர பரமாத்மாக்கள் கிடையாது. நாகரிகமும் கண்ணியமும், எனக்கு மட்டுமல்ல கேள்வி கேட்பவர்களுக்கும் இருக்க வேண்டும். என் மீது அவதூறு கூறிய விஜயலட்சுமி, தனியார் தொலைக்காட்சி நெறியாளரையும் யாருமே கேட்கவில்லையே ஏன்? என் மீது வைக்கப்பட்டவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி நேற்று அதனை வாபஸ் வாங்கியுள்ளார். மேலும், "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை" என்றும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE