வேலூர்: வேலூர் மாவட்டம், மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இன்று நடைபெற்ற விழாவில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 79 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 104 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 19,498 குடும்பங்களைச் சார்ந்த 58,272 நபர்கள் தங்கவைக்கப்பட்டு வசித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் 2021-22 சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரவையில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்களை உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் என அறிவித்ததுடன், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இத்திட்டங்கள் அனைத்தும் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவித்திருந்தார். அவற்றில் முதற்கட்டமாக, 3510 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு, அதற்காக ரூ.176.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 20 மாவட்டங்களில் உள்ள 35 இலங்கைத் தமிழர் முகாம்களில் 3,510 புதிய வீடுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டு வருகிறது. அவற்றில், தற்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் ரூ.79.70 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை தமிழக முதல்வர் வேலூர் மாவட்டத்தில் நேரடியாகவும், இதர 12 மாவட்டங்களில் காணொலிக் காட்சி வாயிலாகவும் திறந்து வைத்தார். மேலும், மேல்மொணவூர், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் இல்லவாசிகளுக்கு புதிய குடியிருப்புகளை வழங்கிடும் அடையாளமாக 5 குடும்பத்தினருக்கு குடியிருப்புக்கான சாவிகளையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்களையும், மரக்கன்றுகளையும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை திறந்து வைத்தல்: வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் முகாமில் 11 கோடி ரூபாய் செலவில் 220 வீடுகளும், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் முகாமில் 21 கோடி ரூபாய் செலவில் 420 வீடுகளும், சேலம் மாவட்டத்தில் 13.22 கோடி ரூபாய் செலவில், பவளத்தானூர் முகாம், அத்திக்காட்டானூர் முகாம் மற்றும் குறுக்குப்பட்டி ஆகிய முகாம்களை ஒருங்கிணைக்கப்பட்டு 244 வீடுகளும், தம்மப்பட்டி முகாமில் 20 வீடுகளும், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7.02 கோடி ரூபாய் செலவில், செவலூர் முகாமில் 3.11 கோடி ரூபாய் செலவில் 62 வீடுகளும், அனுப்பன்குளம் முகாமில் 40 இலட்சம் ரூபாய் செலவில் 8 வீடுகளும், குல்லூர்சந்தை முகாமில் 3.51 கோடி ரூபாய் செலவில் 70 வீடுகளும்,
கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டூர் முகாமில் 5.60 கோடி ரூபாய் செலவில் 112 வீடுகளும், திருவண்ணாமலை மாவட்டம், புதிப்பாளையம் மற்றும் பையூர் முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 5.57 கோடி ரூபாய் செலவில் 111 வீடுகளும், சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் முகாமில் 4.51 கோடி ரூபாய் செலவில் 90 வீடுகளும், தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி முகாமில் 2.60 கோடி ரூபாய் செலவில் 52 வீடுகளும், தருமபுரி மாவட்டம், சின்னாறு அணை முகாமில் 2.51 கோடி ரூபாய் செலவில் 50 வீடுகளும், கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை முகாமில் 1.86 கோடி ரூபாயில் 37 வீடுகளும், திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் முகாமில் 1.77 கோடி ரூபாய் செலவில் 35 வீடுகளும், மதுரை மாவட்டம், திருவாதவூர் முகாமில் 1.51 கோடி ரூபாய் செலவில் 30 வீடுகளும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், வாழவந்தான்கோட்டை முகாமில் 1.51 கோடி ரூபாய் செலவில் 30 வீடுகளும் என மொத்தம் 1591 வீடுகள் தமிழக முதல்வரால் இன்று திறந்து வைக்கப்பட்டன. மேலும், மேல்மொணவூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள வீட்டினையும் நேரடியாகச் சென்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர் முகாம்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சாலை வசதிகள் புதிதாகவும் ஏற்கனவே உள்ளவற்றை உடனுக்குடன் சீர்படுத்தியும் தரப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, மேற்படி 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் ரூ.11.33 கோடி செலவில் இதர அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் மதிப்புடன், மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதை இந்த அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிற மாவட்டங்களில் உள்ள முகாம்வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பயனாளிகளிடம் பிள்ளைகளின் படிப்பு குறித்தும், தற்போது கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த பயனாளி ஒருவர், தன்னுடைய குடும்பம் இம்முகாமில் நீண்டகாலமாக வசித்து வருவதாகவும், தற்போது கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ள வீடு நல்ல வசதியாக உள்ளது என்றும், அங்கன்வாடி, நூலகம், பொது விநியோக அங்காடி உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளது என்றும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்து தங்களுடைய நன்றியைத் தெரிவித்தனர். முன்னதாக தமிழக முதல்வர் 13 மாவட்டங்களில் 19 இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டார்.
இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், வேலூர் மாநகராட்சி மேயர், துணை மேயர், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago