சென்னை: சனாதன தர்மம் என்பது நிரந்தரமான கடமைகளின் தொகுப்பு என்றும், அவற்றை அழிக்கத்தான் வேண்டுமா எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி கேள்வி எழுப்பியுள்ளார்.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சால், நாடு முழுவதும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறும் என்றும், அதில் சனாதன எதிர்ப்பு கருத்துகளை மாணவர்கள் பகிரலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்து இருந்தது.
இந்த சுற்றறிக்கையை, திருவாரூர் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் அறிவுறுத்தலின்பேரில் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டு இருப்பதாக கூறி, அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயனும், அரசு தரப்பில் சிறப்பு அரசு ப்ளீடர் சி.கதிரவனும் ஆஜராகி வாதிட்டனர். அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நாட்டில் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தற்போது பெரிய அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது.
» கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் - எஸ்பி விசாரணை
» 'இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள்' - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சனாதனம் என்பது இந்துக்களின் நிரந்தர கடமைகளை உள்ளடக்கிய தொகுப்பு. சனாதனம் என்பது தேசத்தின் கடமை. அரசனுக்கான கடமை. அரசன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை. பிள்ளைகள் பெற்றோருக்கும், குருவுக்கும் செய்ய வேண்டிய கடமை. ஏழைகளின் நலனுக்கான கடமை. இந்த கடமைகளை அழிக்கத்தான் வேண்டுமா? குடிமகன் நாட்டை நேசிக்கக் கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா என்பதே என்னுடைய கேள்வி.
மதரீதியிலான சம்பிரதாயம்: சனாதன தர்மம் என்பது சாதிய வாதத்தையும், தீண்டாமை கொடுமையையும் ஊக்குவிப்பது போன்ற கருத்து எப்படியோ உருவாகிவிட்டது. சனாதனம் ஒருபோதும் தீண்டாமையை ஊக்குவிக்கவில்லை என்றும், அனைவரையும் சமமாகவே பாவிக்க வேண்டும் என்றும் இந்து மதம் கூறுகிறது. மதரீதியிலான சம்பிரதாயங்கள் காலம்காலமாக கடைபிடிக்கும்போது அதில் சில தவறான நடைமுறைகளும், யாருடைய கவனத்துக்கும் வராமல் உள்ளே புகுந்துவிட வாய்ப்பிருக்கிறது. அந்த களைகள் நீக்கப்படத்தான் வேண்டும்.
அதற்காக பயிரையே வெட்டி எறிந்துவிட வேண்டும் என சொல்ல முடியுமா என்பதுதான் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தில் வைக்கப்பட்டுள்ள சாராம்சம்.
தீண்டாமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மதமும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதே. இயல்பாகவே பகுத்தறிவும் நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது. எனவே, ஒரு மதத்துக்கு எதிராக ஒருவர் பேசும்போது, தனது பேச்சால் பிறரது மனம் புண்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் சுற்றறிக்கையை கல்லூரி நிர்வாகம் திரும்பப் பெற்றுவிட்டதால் வழக்கை முடித்து வைக்கிறேன்.
மாணவர்களுக்கு அறிவுரை: அதேநேரம், தீண்டாமைக் கொடுமையை சமுதாயத்தில் இருந்து முற்றிலுமாக களைய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. அவர்கள் இந்நாட்டின் குடிமகன்கள் என்ற முறையில் தீண்டாமை ஒழிப்புக்கு எந்தவகையிலும் தங்களது பங்களிப்பைச் செய்யலாம் என்பதையும் கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago