‘இண்டியா’ கூட்டணி பயத்தால் தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி: திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் விமர்சனம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: இண்டியா கூட்டணியைப் பார்த்து, பாஜக அரசு பயந்துகொண்டு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது என திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் எம்.பி.கே.சுப்பராயன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்றத்தில் வரும் 18-ம் தேதி முதல் வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு கூட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் இல்லாத ஒரு நடைமுறையாக சிறப்பு கூட்டத்தொடரில் எந்த பொருள் குறித்து விவாதம் நடைபெறப்போகிறது என்பது குறித்து, இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. பல்வேறு வதந்திகள் பரவக்கூடியநிலையில், அது பற்றி தற்போது தெரிவிக்க முடியாத சூழலில் சிறப்பு கூட்டத்தொடரில் விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அதைச் செய்ய மத்திய அரசு செய்யத் துணியாது.

9 ஆண்டுகளுக்கு முன்பு எமக்கு வாக்களித்தால், நல்ல காலம் பிறக்கும் என மோடி பேசினார். அவர் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகிவிட்டன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்றார். இதுவரை 18 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்க வேண்டும். பலர் வேலையிழக்கும் நிலைதான் நாட்டில் நிலவுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு ரேஷன் கடைகளில் கிலோ ரூ. 12.50-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, தற்போது ரூ. 25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் இரண்டரை மடங்காக அதிகரித்துவிட்டது.

தேச நலன்களுக்கு விரோதமான அரசு தான் மத்தியில் நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் என்ற தீயசக்தியின் கருவியாக இருந்து பாஜக இயங்குகிறது. திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து வரக்கூடிய நிலையில் மோடி அரசு அப்புறப்படுத்தினால் மட்டுமே, திருப்பூர் தொழில்துறை காப்பாற்றப்படும். கார்ப்பரேட் துறையில் இந்த பனியன் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஆபத்து உள்ளது.

இதன் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழியும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக இண்டியா கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்வார்கள். மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம் உயர்வு உள்ளிட்டவை குறித்து மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.

இண்டியா கூட்டணியை பார்த்து, பாஜக அரசு பயந்துகொண்டு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இண்டியா கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெறும் என, மத்திய உளவுத்துறையில் தகவலின் காரணமாக பதற்றத்தில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி வழக்கில் அவர் தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது, பாஜகவில் ஏன் சேரக்கூடாது என கேள்வி எழுப்பி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை கவலையுடன் கவனிக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE