“கொடுப்பதை கெடுக்கும் வேலையை எதிர்க்கட்சியினர் பார்க்கிறார்கள்” - அமைச்சர் கே.என்.நேரு சாடல்

By த.சக்திவேல்

மேட்டூர்: “கொடுப்பதை கெடுப்பதற்குரிய வேலையை எதிர்க்கட்சியினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த குரும்பபட்டி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 1,250 மகளிர்களுக்கு டெபிட் கார்டை வழங்கினார்.

தொடர்ந்து, விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, பேசுகையில், “தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று சொன்னோம். தேர்தல் நேரத்தில் 2 கோடி பேருக்கு தருகிறீர்கள் என்று சொல்லிவிட்டு, ஒரு கோடி பேருக்கு தான் தருகிறீர்கள் என்று கொடுப்பதை கெடுப்பதற்குரிய வேலையை எதிர்க்கட்சியினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 2.26 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. நான் 20 வருடத்திற்கு முன்பே உணவுத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது, 17 லட்சம் பேர் அரிசி வேண்டாம் சர்க்கரை போதும் என்று பணக்காரர்கள் சொன்னார்கள். தற்போது, 1.06 கோடி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். இதில் விடுபட்டவர்களுக்கும் வழங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு, முதியோர் உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200 ரூபாயாக அதிகரித்து கொடுத்துள்ளோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.06 கோடி பேரும், முதியோர் உதவி தொகை திட்டத்தில் 39 லட்சம் பேர் மொத்தம் 1.45 கோடி குடும்பங்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1,000, ரூ 1,200 உதவித்தொகை வழங்கிக் கொண்டு வருகிறோம். அரசு அலுவலர்கள் 20 லட்சம் பேர், பணக்காரர்கள் 25 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை தவிர தகுதியுள்ள ஏழை தாய்மார்கள் ஒருவரை கூட விட்டு விடாமல் ரூ 1,000 முதல்வர் தந்துள்ளார்.

இந்தத் திட்டத்தால் முதல்வருக்கு நல்ல பெயரும் வந்து விடும் என்பதற்காக வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள். இந்த ஆட்சி வந்ததில் இருந்து மகளிருக்கு ரூ 1,000, இலவச பஸ், காலை சிற்றுண்டி திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் என ஒவ்வொரு திட்டமும் முதல்வர் மகளிருக்காக உருவாக்கி வருகிறார்.

எடப்பாடி பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டித் தரப்படும். தமிழக முதல்வர் சேலம் வந்த போது 100 ஏக்கரில் ஜவுளி பூங்கா, ரூ.150 கோடியில் பாலம், ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், இளம்பிள்ளைகள் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் உள்ளார்.

பனமரத்துப்பட்டி ஏரி ரூ.100 கோடி செலவில் சீரமைக்க உள்ளது. இந்த அரசு சேலம் மாவட்டத்திற்கு தேவையான அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் என்ன தேவையோ அதை முதல்வர் சேலம் மாவட்டத்திற்கு தந்துள்ளார். சேலம் முழுவதும் நமது ஆட்சியின் பெயரால் மக்களுக்கு நல்ல பயன்களை செய்ய வேண்டும் என முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், டிஆர்ஒ மேனகா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), சதாசிவம் (மேட்டூர்), எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், மாவட்டச் செயலாளர்கள் செல்வகணபதி (மேற்கு) சிவலிங்கம் (கிழக்கு), எடப்பாடி நகராட்சி தலைவர் பாஷா, மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE