“என் மகன் துரை வைகோ பதவிக்காக கட்சியில் இல்லை” - மதுரை மதிமுக மாநாட்டில் வைகோ பேச்சு

By என்.சன்னாசி

மதுரை: “பதவிக்காக என் மகன் துரை வைகோ கட்சியில் இல்லை. இதை நான் வெளிப்படுத்தும் முன்பே மகன் தெரிவித்துவிட்டார்” என மதுரை மதிமுக மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

மதுரையில் மதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் மாநாடு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது: “எனது பேச்சாற்றலை பார்த்து காங்கிரஸில் சேர்க்க காமராஜர் தூது அனுப்பினார். அது முடியாத காரியம் என மறுத்துவிட்டேன். மதுரை மக்கள் இன்று தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், முக்கிய காரணம் வைகோ. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நடந்த முயற்சிப்பதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தேன். பெரியாறு அணையை காக்க 3 முறை நடை பயணம் சென்றுள்ளேன்.

இதுவரை மொத்தம் 7 ஆயிரம் கிமீ நடை பயணம் சென்றுள்ளேன். எங்குமே பங்களாவில் தங்கி ஓய்வெடுக்கவில்லை. அரசியலுக்காக நான் நடை பயணம் வரவில்லை. தமிழக நலனுக்காகவே உழைத்தேன். எங்கும் கட்சி கொடி பிடிக்கவில்லை. நியூட்ரினோ வரக்கூடாது என தடுக்க வழக்கு தொடர்ந்தேன். ‘இது கனவு திட்டம்’ என மோடி சொன்னார். நான் நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறத்தியுள்ளேன்.

ஸ்டெர்லைட் திட்டத்தை தடுக்க பலகட்ட போராட்டங்களை நடத்தினேன். ஸ்டெர்லைட் அதிபர் என்னிடம் பேச முயன்றார். மறுத்துவிட்டேன். நாட்டின் அட்டர்னி ஜெனரல் புதுடெல்லியிலிருந்து வந்து என்னை சந்தித்தார். ஸ்டெர்லைட் பற்றி தவறாக புரிதல் உள்ளதால் அது குறி்த்து விளக்கம் அளிக்க வந்ததாக கூறினார். உடனே அவரை வெளியே போகச்சொன்னேன். இந்தியாவிலேயே அட்டர்ஜி ஜெனரலை வெளியே போக சொன்னது இந்தச் சம்பவமாகத்தான் இருக்கும். ஸ்டெர்லைட், நியூட்ரினோவை தடுத்தது பொது நன்மைக்காக. இந்த வழக்கில் நானே வாதாடினேன். இதற்காக கட்டணம் ஏதும் பெறவில்லை.

மேகேதாட்டு அணை திட்டம் கூடாது எனக் கூறி 12 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்தினேன். தஞ்சை, திருவாரூர் என ஊர், ஊராக சென்று மேகேதாது திட்டத்தின் பாதிப்பை விளக்கினேன். கட்சி கொடியே கட்டாமல் சென்று இந்தப் போராட்டத்தை நடத்தினேன். ஓரளவு வெற்றியும் கிடைத்தது.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன் என்ற பழிச்சொல்லும், பாராட்டும் எனக்குண்டு. பிரபாகரன் என்னை நேசித்தார் என்பது உண்மை. பிரபாகரன் அறையில் எனது போட்டோ மட்டும் உள்ளது என்றனர். பிரபாகரனை சந்திக்க இலங்கை சென்றபோது தாக்கப்பட்டதில் காலில் காயமடைந்தேன். 23 நாட்கள் பிரபாகரனுடன் தங்கினேன். போரிட்டு அங்கேயே மடிகிறேன் என்றேன். எங்கள் நன்மைக்காக தமிழகம் போகுமாறு பிரபாகரன் கூறி, முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் வழங்க ஒரு கடிதத்தை கொடுத்தார்.

பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மார்பில் கு்ண்டுகள் பாய்ந்து இறந்துகிடந்தார். இதைப் பார்த்து என் தாயார் உண்ணாவிரதம் இருந்தார். 5-வது நாளில் அவர் இறந்தார். நாட்டிற்காக அவர் இறந்தார். மதுவை ஒழிக்க மதுக்கடையை சூறையாடினோம். என் சகோதரர் ஜெயிலுக்கு சென்றார். என்னைப்பற்றி செய்தியே வெளியாகவில்லை என்ற வருத்தத்தில் தீக்குளித்ததாக சிவகாசி இளைஞரணி நிர்வாகி ரவி தீக்குளித்து இறந்தார்.

ஸ்டெர்லைட், நியூட்ரினோவில் பணம் வாங்கிக்கொண்டு வைகோ செயல்படுவதாக வைகோ பற்றி பொய் செய்தி வெளியிடுவதைக் கண்டித்து என் உறவினர் சரவண சுரேஷ் விருதுநகரில் தீக்குளித்தார். இப்படி செய்தால் இதன் மூலமாவது சரியான செய்தி வெளியிடுவார்கள் என்பதற்காக தீக்குளித்தேன் என்றார்.

தமிழகத்துக்காக திமிழீழத்துக்காக, நாட்டிற்காக என் குடும்பம் தியாகம் செய்துள்ளது. கருணாநிதி என்னிடம் அடிக்கடி கூறுவார்.‘பல கூட்டங்களில் நான் என்ன பேச வேண்டும் என நினைத்தேனோ அதை நீ பேசிவிடுகிறாய்’ என்பார். இருதயத்தில் என்ன நினைப்பு வருகிறதோ அதே நினைவு இன்னொருவருக்கு வரும்.

இந்த நிலைமை எனக்கு இன்று வந்துவிட்டது. மாநாட்டில் இன்று நான் என்ன பேச நினைத்தேனோ அதை துரை வைகோ பேசிவிட்டார். ஏதாவது ஒரு பதவிக்கு போட்டிட்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மகனுக்கு இல்லை என பேச இருந்தேன். இதையே மகன் பேசிவிட்டார் என்றார். கரோனாவில் உடல் நலம் கெட்டு, 3 ஆண்டுகளாக நான் வெளியே செல்ல முடியாத சூழல். அப்போது கட்சியினர் வீட்டு நிகழ்வுகளில் என் இடத்தில் இருந்து துரை வைகோ பங்கேற்றார்” என்று வைகோ பேசினார்.

மதுரை எம்எல்ஏக்கு வைகோ பாராட்டு: மதிமுக மாநாட்டில் வைகோ பேசுகையில், ‘மதுரை எம்.பூமிநாதன் எம்எல்ஏ.தான் இந்த மாநாட்டின் முதல் வெற்றிக்கு காரணமானவர். தென் மண்டலத்தை கட்டி காத்துவருகிறார் அவர். 19 மாதங்கள் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தவர். அவர் ஜாமீனில் வெளிவந்தபோது, வைகோ சிறையில் இருக்கும்போது நீ ஏன் ஜாமீனில் வந்தாய் என கேட்ட எழுச்சியான தாயார் பெற்றெடுத்த பாக்கியவான்’ என்றார்.

முன்னதாக, “மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மதிமுகவுக்காக உழைக்கும் உண்மை தொண்டருக்கு இந்த வாய்ப்பை அளித்தால் மகிழ்வேன்” என்று மதுரை மதிமுக மாநாட்டில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசினார். வாசிக்க > “தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை... சனாதனத்தை அகற்றுவது கடமை...” - மதுரை மதிமுக மாநாட்டில் துரை வைகோ பேச்சு

14 தீர்மானங்கள்: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும், இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உலக அளவில் தமிழர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்களை மதுரை மாநாட்டில் மதிமுக நிறைவேற்றியது. அதன் விவரம்: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE