நேர்முகத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவோர் அடையாளம் மறைக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறையில் நேர்முகத்‌ தேர்வுகளுக்கு (Oral Test) அனுமதிக்கப்படும்‌ விண்ணப்பதாரர்களின்‌ பெயர்‌, நிழற்படம்‌, பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள்‌ மறைக்கப்படும்” என தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அரசுப்‌ பணியாளர்களை தேர்வு செய்யும்‌ பணிகள்‌ தொடர்பான நடைமுறைகளில்‌ வெளிப்படைத்‌ தன்மை மற்றும்‌ நம்பகத்தன்மையை மேம்படுத்தும்‌ விதமாக அதன்‌ நடைமுறைகளில்‌ தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக நேர்முகத்‌ தேர்வுகளுக்கு (Oral Test) அனுமதிக்கப்படும்‌ விண்ணப்பதாரர்களின்‌ பெயர்‌, நிழற்படம்‌, பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள்‌ மறைக்கப்பட்டு, அதற்குப்‌ பதிலாக விண்ணப்பதாரர்களை A,B,C,D முதலான எழுத்துக்களைக்‌ கொண்டு குறியீடு செய்து நேர்காணல்‌ அறைகளுக்குள்‌ (Interview Boards) அனுமதிக்கப்படுவர்‌.

இப்புதிய நடைமுறைகளுடன்‌ ஏற்கெனவே உள்ள Random shuffling முறையும்‌ சேர்த்து பின்பற்றப்பட உள்ளதால்‌ விண்ணப்பதாரர்கள்‌ மீது சார்புத்‌ தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்‌ நீக்கப்படுவதுடன்‌ வெளிப்படைத்‌ தன்மை அதிகரிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்‌படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு எதிர்ப்பு: இதனிடையே, தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழக அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, தகுதியும், திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளைப் பறித்து விடுகிறது. அனைவருக்கும் சமநீதியும், சமுக நீதியும் கிடைக்க நேர்முகத் தேர்வு பெருந்தடையாக உள்ளது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.

ஆந்திராவில் முதல் தொகுதிபணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் 2019-ம் ஆண்டுமுதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அரசுப் பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இங்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும்’ என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE