சென்னை: "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது என்று ஜாமீன் கோரிய வழக்கில், அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்துள்ளார்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முந்தையது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளாக செந்தில் பாலாஜி வருமான வரியை தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்? வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித் துறையால் ஏற்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை
வேலைக்காக பணம் கொடுத்தாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் என்ற இருவரிடம் தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீது கோபி, பிரபு ஆகிய இருவர் புகாரளித்தனர். அதில் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்படவில்லை. மற்றொருவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கூடவில்லை.
» “அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பித்த அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்” - அதிமுக
» ரூ.700 கோடியை நெருங்கிய அட்லீ - ஷாருக்கானின் ‘ஜவான்’ வசூல்!
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது?’ என விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத் துறையிடம் உள்ள நிலையில் மனுதாரரால் சாட்சிகளை கலைக்க முடியாது.
இலாகா இல்லாத அமைச்சராக அவர் இருக்கும் நிலையில் எங்கும் தப்பி செல்லவும் இயலாது. செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல்நிலை படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்வார். 30,000 கோடி, 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கணினியில் வைக்கப்பட்டுள்ளதால், ஆவணங்களை கலைக்க முடியாது" என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "செந்தில் பாலாஜி மீது கூறப்படும் முறைகேடு அவர் அதிமுகவில் இருந்தபோது நடைபெற்றது. ஆனால் அவர் திமுகவில் சேர்ந்த பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை 6 நாட்கள் சட்ட விரோதமாக அமலாக்கத் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா, இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி எங்கும் தப்பி செல்லமாட்டார். வேண்டுமென்றால் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
அப்போது, ‘இந்த வழக்கில் புதிய ஆவணங்களை தற்போது தாக்கல் செய்துள்ளதால் எங்களது தரப்பு வாதத்தை செவ்வாக்கிழமை தொடங்கலாமா?’ என்று அமலாக்கத்துறை தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துள்ளது. இந்த முறைகேடு இடைத்தாரர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு கிடைக்கவில்லை. வருமான வரி கணக்கை, வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது என்று பல தீர்ப்புகள் உள்ளன. வருமான வரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவர் தவறு செய்யவில்லை என்று பொருள் இல்லை. விசாரணையில் தான் உண்மை தெரியவரும்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி தாம் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். வேலை வேண்டும் எனக் கோரி பணம் கொடுப்பவர்கள் வங்கி மூலம் பணம் கொடுக்கமாட்டார்கள். அமலாக்கத் துறை விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது.
இந்திய தண்டனை சட்ட வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். அமலாக்கத் துறை சட்டம் என்பது வேறு. அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளார். எனவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் கோருவதற்கு உடல்நிலை ஒரு காரணம் அல்ல.
அமலாகக்த் துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களும் உள்ளனர். செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத் துறை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கத்தில்தான் எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கின் தீர்ப்பை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அமலாக்கத் துறை மறுப்பு: "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சொல்லியதற்கு உடனடியாக அமலாக்கத் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த சமயத்திலும் யாரும் கேட்கவில்லை. செந்தில் பாலாஜி அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பிணை வேண்டும் என்பதற்காக, வேறு வலுவான வாதங்கள் இல்லாததால் இந்தப் பொய்யை செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் தற்போது முன்னெடுக்கிறார்கள்" என்று அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் கூறியுள்ளார்.
செப்.29 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: இதனிடையே,இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வழியாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6-வது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது
முன்னதாக, கடந்த ஆக.28ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்,உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago