புதுச்சேரியில் டெங்கு அதிகரிப்பு: செப்டம்பரில் 64 பேருக்கு பாதிப்பு; இருவர் பலி - சுகாதாரத் துறை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: டெங்குவால் செப்டம்பரில் இதுவரை 64 பேர் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிரிழந்த நிலையில் நடப்பாண்டு டெங்குவால் 1195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்தாண்டை விட அதிகம். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மீன ரோஷினி, காயத்ரி ஆகிய இருவர் டெங்கால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய சூழல் தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை டெங்குவால் 1195 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டிலோ 792 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். நடப்பு செப்டம்பரில் மட்டும் 64 பேர் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை தாமதமாக எடுத்ததுதான் இறப்புக்கு முக்கியக் காரணம்.

நடப்பாண்டு டெங்கு அதிகமாக காணப்படுகிறது. மழைக்காலம் முன்பே ஆரம்பித்ததும், தண்ணீர் தேங்கியதும் அதனால் ஏடிஎஸ் கொசு முட்டையிட்டு பரவியதும் ஓர் காரணம். தண்ணீர் தேங்கியிருப்பதை சரி செய்வதுதான் இதை தடுக்க முக்கியமான பணி.

வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பிரிட்ஜ் பின்னால் உள்ள தண்ணீர், வீட்டில் தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.

டெங்கு பாதிப்பால் இறந்த மேட்டுப்பாளையம், குருமாம்பேட் பகுதிகளில் சுகாதாரத்துறை, நகராட்சி தரப்பில் கொசு மருந்து அடித்துள்ளோம், அப்பகுதிகளில் வீடுகளில் டெங்கு பாதிப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்வோம். இறந்தோர் வீடுகளில் உள்ளோருக்கும் அறிகுறி இருக்கிறதா என்பதைப் பார்த்தோம்.

மழைக்காலம் பரவலாக இருப்பதால் கூடுதலாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. டெங்கு வராமல் இருக்க தண்ணீர் தேங்காமல் இருக்க பார்த்துகொள்வதுதான் முக்கியம். " என்றார்.

அதேபோல் சிக்கன்குனியாவில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. நடப்பு மாதத்தில் 5 பேர் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE