கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் - தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்கள் பயன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை, அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூலை மாதம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, இத்திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர்உரிமை தொகை திட்டம்’ என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார். அத்துடன், இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.

இதற்கான விண்ணப்ப விநியோகம் மற்றும் விண்ணப்ப பதிவை தருமபுரியில் முதல்வர் ஜூலை 24-ம் தேதி தொடங்கி வைத்தார். ஜூலை 24 முதல் ஆக.16-ம் தேதி வரை 2 கட்டங்களாக இப்பணிகள் நடந்தன.

1.63 கோடி பேர் விண்ணப்பம்: பின்னர், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறுவோரின் குடும்பத்தை சேர்ந்த பெண்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, ஆக.18 முதல்20-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பிறகு, வருமான வரி, வாகனப் பதிவு, மின் இணைப்பு உட்பட அரசிடம்இருந்த தகவல் தரவுகளுடன், விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் ஒப்பிடப்பட்டன. போதிய விவரங்கள் கிடைக்காதது மற்றும் சந்தேகம் உள்ள விண்ணப்பங்கள் தொடர்பாக கள அலுவலர்கள் ஆய்வு நடத்தி, தகவல்களை சரிபார்த்தனர். இதையடுத்து, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாதாமாதம் அவர்களது வங்கிக் கணக்கிலேயே இத்தொகை செலுத்தப்படும் என்பதால், பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் பணி கடந்த செப்.12-ம் தேதி முதல் நடந்தது. இதற்காக அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.1 அனுப்பப்பட்டது. அவர்களை அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்குக்கு பணம் வந்தடைந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அண்ணா பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், 10 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்கி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்காக கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா சிலைக்கு மரியாதை: விழாவில் பங்கேற்பதற்காக, இன்று காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை பண்ணை இல்லத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்படுகிறார். அங்கிருந்து விழா நடைபெறும் இடம்வரை 40 கி.மீ. தூரத்துக்கு வழிநெடுகிலும் முதல்வருக்கு திமுகவினர், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழியில், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் செல்லும் முதல்வர், அங்கு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ளஅண்ணா நினைவு இல்லம் சென்று மரியாதை செலுத்துகிறார்.

வங்கிக் கணக்கில் முன்கூட்டியே ரூ.1,000 செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திட்டத்தில் குழப்பம், குறைபாடு ஏற்படாமல் கண்காணிக்குமாறு முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்தியதால், கடந்த சில நாட்களாக வங்கிக் கணக்கு சரிபார்ப்பு பணிகள் நடந்து வந்தன. 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளை சரிபார்க்க ரூ.1 அனுப்பப்பட்டது.

இந்நிலையில், திட்டம் தொடங்கப்படும் நாளான இன்று அனைத்து வங்கிக் கணக்குக்கும் ஒரே நேரத்தில் தொகையை விடுவித்தால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்றே ரூ.1,000 உரிமை தொகை விடுவிக்கப்பட்டது. பயனாளிகளுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. வங்கிகளும் அந்த தொகை வைப்பு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்திகளை பயனாளிகளுக்கு அனுப்பின. அறிவித்த நாளுக்கு முன்பாகவே ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அரசு முத்திரை, திட்டத்தின் பெயர், வங்கி பெயர், பயனாளி பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் பிரத்யேகமாக ஏடிஎம் அட்டையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையையும் பயனாளிகளுக்கு முதல்வர் இன்று வழங்குகிறார். தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் இதை பயனாளிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்குகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE