சிவகாசி அருகே விதிமீறலில் ஈடுபட்ட 8 பட்டாசு கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் காலாவதியான உரிமத்துடன், விதிமீறலில் ஈடுபட்ட 8 பட்டாசு விற்பனை கடைகளுக்கு வருவாய்துறையினர் நேற்று சீல் வைத்தனர்.

சிவகாசி அருகே வில்வநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் வட்டாட்சியர் மற்றும் பட்டாசு தனி வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகுலட்சுமி கிராக்கர்ஸ், சுப்புராஜ் கிராக்கர்ஸ், சம்யுதா கிராக்கர்ஸ் அபிநிவாஷ் கிராக்கர்ஸ், கண்ணன் கிராக்கர்ஸ், அய்யனார் கிராக்கர்ஸ், விஜயலட்சுமி கிராக்கர்ஸ், சிவசங்கர் கிராக்கர்ஸ் ஆகிய 8 பட்டாசு விற்பனை கடைகளின் உரிமம் கடந்த 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கியது தெரியவந்தது.

மேலும் இந்த 8 கடைகளிலும் பாதுகாப்பு தூரத்திற்குள் சுமார் 15 மீட்டர் நீளம் கொண்ட தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் அபிநிவாஷ் கடையின் சுவற்றோடு சேர்த்து வீடு கட்டி பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதனால் இந்த 8 கடைகளையும் தனி வட்டாட்சியர் சாந்தி, வட்டாட்சியர் லோகநாதன் முன்னிலையில் வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE