16 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பு: ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு பிடிவாரன்ட்

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் சித்தன்னவாசல் பூங்காவில் 1988-ல் இருந்து இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரை பத்தாண்டுகள் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்யும் அரசு உத்தரவின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை அனுப்பினார். மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரை அனுப்பினார். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தன்னை பணி நிரந்தரம் செய்யவும், பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்கக்கோரி 2016-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 16 ஆண்டுகளாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரும், ஐஏஎஸ் அதிகாரியுமான பொன்னையா ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.கண்ணன் வாதிட்டார். அப்போது, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா நேரில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் 16 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனுதாரரின் பணியை நிரந்தரம் செய்ய ஆட்சியரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரை அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரருக்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஊரக வளர்ச்சி இயக்குனர் பொன்னையா நேரில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது. அவருக்கு எதிராக எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. இந்த பிடிவாரன்ட்டை சென்னை மாநகர் காவல் ஆணையர் செப். 22-க்குள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE