“புதுச்சேரியில் ரவுடிகள் ராஜ்ஜியம்; மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரிப்பு” - காங்கிரஸ் எம்.பி.

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “புதுச்சேரி முழுக்க மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரித்து ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. ரவுடிகள் பலருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சரியாக செயல்படவில்லை. இதன் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ உதவி சரியாக கிடைக்கவில்லை. நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்தும் அரசு செவி சாய்ப்பதில்லை. ஆயுஷ்மான் பாரத்தில் அடையாள அட்டைக்கூட தரவில்லை. எந்த மருத்துவமனைக்கு சென்றால் உதவி கிடைக்கும் என்ற விவரம் கூட இல்லை. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தையே தோல்வி அடைய செய்கிறது. ஒதுக்கீடு செய்த பணத்தை கூட முழுமையாக செலவிட முடியாத நிலை உள்ளது. முதல்வரிடம் எடுத்து சொல்வதில் ஏற்பட்ட தயக்கமும் இத்திட்டத் தோல்விக்கு ஓர் காரணம்.

டெங்குவால் இருவர் உயிரிழந்துள்ளனர். மழை வருவதற்கு முன்பாக கொசு மருந்து தெளிக்கப்படவில்லை. தூய்மைப் பணிகள் நடக்கவில்லை. அதேபோல் குப்பை அள்ளும் டெண்டர் இறுதியாகவில்லை. அதை சரியாக ஒதுக்காமல் குப்பை அள்ளுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் முறைகேட்டுக்கு இடம் தரக் கூடாது.

சட்டசபைக்கு இடம் கையகப்படுத்தி திருப்பி தந்ததாக சொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பேரவைத்தலைவர் செல்வம், நான் கையெழுத்திட்டதாக ஒரு காகிதம் காண்பித்தார். அது கோப்பே இல்லை. நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு திருப்பி தந்ததில் ஊழல் என பேரவைத்தலைவர் முதலில் குறிப்பிட்டார். அதன்பின்போ, திருப்பி தராததால் ஊழல் நடந்ததுள்ளதாக மாற்றி சொல்கிறார். இதற்கு காரணம் யார் என்பதை தற்போதைய முதல்வர் ரங்கசாமியிடம் பேரவைத் தலைவர் கேட்டால் உடனே அது தெரிந்து விடும். எந்த இடம் யாரிடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது என்ற கோப்பை முதலில் பேரவைத்தலைவர் பார்க்க வேண்டும். அதற்கு கஷ்டமாக இருந்தால் நானே சிபிஐக்கு கடிதம் எழுத தயாராக இருக்கிறேன். பேரவைத்தலைவர் தனது தவறை மறைக்க மேலும் தவறு செய்கிறார். திசைதிருப்பும் பணியை செய்கிறார். அனைத்து கோப்புகளையும் சட்டசபை மேஜையில் வைத்து எம்எல்ஏக்கள் பார்க்க ஏற்பாடு செய்யலாம். அதை மேஜையில் வைக்க அவர் தயாரா?

புதுச்சேரி காங்கிரஸ் சார்பாக கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்துவோம். விவசாயிகளை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட கேட்போம். பாஜக இருந்தபோதும் இப்பிரச்சினை இருந்தது. தண்ணீர் இருந்தால் திறந்து விடுவார்கள். அணைக்கட்டி வைத்திருக்க முடியாது. சேமிப்பு தண்ணீரை பங்கீட்டுக்கொள்வதுதான் முறை. நமது வேண்டுகோளை ஒழுங்காற்று முறை ஆணையம் மூலமாக வலியுறுத்தவேண்டியது புதுச்சேரி அரசு கடமை. எங்களுடையதும் கூட.

ஆருத்ரா பைனான்ஸ் விவகாரத்தில் தொடர்புடையோர் புதுச்சேரியில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவான அரசியல் தலைவர்களையும் அனைவருக்கும் தெரியும். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இணைப்பில் உள்ளோர் தலைமறைவாக உள்ளனர். அவர் யாருடன் இருந்தார்கள் என்பது தெரியும்.

புதுச்சேரியில் தயாராகும் மருந்து விற்பனை வரி கட்டாமல் பெரியளவில் வியாபாரம் நடக்கிறது. இங்கேயே உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறார்கள். கடைகளில் கிடைக்கிறது. அது தரமானதா, தரமற்றதா என தெரியவில்லை. அதை கண்காணிப்பதில்லை. நடவடிக்கையும் இல்லை. இதில் ஆட்சியில் உள்ள பலருக்கும் பெரும் பங்கு செல்கிறது. மாதந்தோறும் செல்கிறது. இதில் உள்ள சிபிஐ விசாரணை திசை திருப்பப்படுகிறது.

புதுச்சேரி முழுக்க மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரித்து ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. ரவுடிகள் பலருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. போலீஸ் வழக்கே போடுவதில்லை. ரவுடிகளுக்கு ஆதரவாக உள்ளனர். ஒரு பக்கம் ரெஸ்டோ பார், மறுபக்கம் போதைப்பொருள், ரெஸ்டோ பாரில் கம்பெனி தர ஆண்களும், பெண்களும் வைத்துள்ளனர். இது சமுதாய சீரழிவு. புதுச்சேரி மக்களை அழிக்கும் வகையில் புதுச்சேரி அரசு செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE