மதுரையில் மதிமுக மாநாடு: வைகோ உரையைக் கேட்கும் ஆர்வத்தில் குவியும் தொண்டர்கள்

By என். சன்னாசி

மதுரை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, மதிமுக சார்பில், மாநாடு நடத்துவது வழக்கம். அவரது 115-வது பிறந்த நாளான நாளை (செப்., 15) அக்கட்சி சார்பில், மதுரையில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரை விமான நிலையம் அருகிலுள்ள வலையங்குளம் பகுதியில் நடக்கிறது. இதற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளன. நேற்று முன்தினமும், நேற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் ராசேந்திரன், பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாநாடு திடலை பார்த்தனர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி, மாலை 3 மணிக்கு மாநாடு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 3 முதல் 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதைத் தொடர்ந்து மாநாட்டு திடலில் கட்சி கொடியேற்றப்படுகிறது. திராவிட இயக்க சுடரை உயர்மட்ட குழு உறுப்பினர் செல்வராகவன், மாநாட்டு தலைவர் அர்ஜுனராஜ் ஏற்றுகின்றனர். மதுரை புறநகர் மாவட்ட செயலர் மார்நாடு, தேனி மாவட்ட செயலர் ராமகிருஷ்ணன் முன்மொழிகின்றனர். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலர் ஜெயராமன், சிவகங்கை மாவட்ட செயலர் மனோகரன் , ராமநாதபுரம் மாவட்ட செயலர் சுரேஷ் வழிமொழிகின்றனர்.

தொடர்ந்து, திராவிட இயக்க முதல் மூவர், தந்தை பெரியார், மொழிப்போர் தியாகிகள், அண்ணா படத்திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. துணை பொதுச் செயலர் ராசேந்திரன் மாநாட்டை திறந்து வைக்கிறார். வரவேற்புக்குழு தலைவர் புதூர் பூமிநாதன் எம்எல்ஏ வரவேற்கிறார். இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலாம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்க சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச் சூழல் சவால்கள், அண்ணா ஏற்றிய அறிவுச் சுடர், திராவிட இயக்க மகளிர், மொழிப்போர் உரிமைப் போராட்டம், நிதி நீர் உரிமைப் போரில் வைகோ, நாடாளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கு நமது இலக்கு போன்ற தலைப்புகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர்.

ஆடிட்டர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், துரை. வைகோ, மல்லை. சத்யா, கணேசமூர்த்தி எம்பி, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, சின்னப்பா எம்எல்ஏ, ரகுராம் எம்எல்ஏ ஆகியோரும் சிறப்புரையாற்றுகின்றனர். பொதுச் செயலாளர் வைகோ, மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். மாநகர் மாவட்ட மதிமுக செயலர் எஸ்.முனியசாமி நன்றி கூறுகிறார்.

தென் மாவட்டங்களை மையப்படுத்தி இந்த மாநாடுக்கு ஏற்பாடு செய்தாலும், மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் லட்சக் கணக்கானோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர். சில ஆண்டுக்கு பிறகு வைகோ மாநாட்டில் பேசுகிறார். அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவித்த நிலையில், அவரது பேச்சை கேட்க தொண்டர்கள், நிர்வாகிகள், மக்களும் ஆர்வத்தில் உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விரைவில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் வைகோவின் மகன் துரை.வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாம் என்ற அடிப்படையில் தென்பகுதியில் நடக்கும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆலோசனையின் பேரில், டிஐஜி ரம்யா பாரதி மேற்பார்வையில் எஸ்பி சிவபிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE