“அம்மாவின் ஆசையை நிறைவேற்றவே புதிய கட்சி தொடங்கியுள்ளேன்” - ஜெ.ஜெயலட்சுமி பகீர்

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: “எனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்” என்று என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறிவரும் ஜெ.ஜெயலட்சுமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (செப்.14) கட்சி நிர்வாகிகளை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். சோபன்பாபுதான் எனது தந்தை. எனது தாயார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இரண்டு முறை சந்தித்துள்ளேன். அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை சந்தித்தேன். ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது அவர் வசித்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். அவர் எழுதிய டைரி, பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்டவை என்னிடம் உள்ளன. பல காரணங்களுக்காக நான் வெளிப்படையாக ஜெயலலிதாவின் மகள் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா மகள் என்பதற்கான டிஎன்ஏ மரபணு சோதனைக்கான விவரங்களை நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளேன். தற்போது ‘அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். கட்சியின் சின்னமாக, இரட்டை இலைக்கு போட்டியாக இரட்டை ரோஜா சின்னத்தை வைத்துள்ளேன். கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக கொடைக்கானல் வந்தேன்.

2024-ல் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எனது கட்சி 39 தொகுதிகளிலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும். எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது கட்சியின் கொள்கை, எனது அம்மாவின் ஆசைதான். எனது அம்மாவின் இறப்பில் சந்தேகம் உள்ளது. பலர் இதற்கு காரணமாகவும் உள்ளனர்” என அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE