சிவகாசி சிறப்புப் பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக ஆசிரியர் கைது

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, வீடியோ எடுத்து வெளியிட்டதாக ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி சாட்சியாபுரத்தில் சி.எஸ்.ஐ மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறைவுடையோர் சிறப்புப் பள்ளி உள்ளது. அரசு நிதி உதவியுடன் உண்டு உறைவிட வசதியுடன் செயல்படும் இப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குறைவுடைய மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த விவகாரம் குறித்து விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பிரம்மநாயகம் தலைமையிலான அலுவலர்கள் பள்ளியில் நேரில் ஆய்வு செய்தனர். பள்ளி தாளாளர் தயாளன் பரனதாஸ், தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். வீடியோவில் உள்ள மாணவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகத்திடம் கேட்டபோது, ''மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்த வைத்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களிடம் விசாரணை நடத்தினோம். விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கும் அனுப்ப உள்ளோம். அதன் அடிப்படையில் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

விசாரணையில் பள்ளியில் பணியாற்றும் உதவி ஆசிரியர் இமானுவேல் என்பவர் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி, வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தாளாளர் தயாளன் பரனதாஸ், பள்ளி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களை தவறாக பயன்படுத்தியதாகவும் உதவி ஆசிரியர் இமானுவேல் மீது திருத்தங்கல் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் உதவி ஆசிரியர் இமானுவேலை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE