“கர்நாடகாவில் இரு முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்தில்..?” - காவிரி பிரச்சினையில் அன்புமணி காட்டம்

By க.ரமேஷ்

கடலூர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களவை தொகுதி வாக்குச்சாவடி களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று (செப்.14) கடலூரில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். முன்னதாக, கடலூர் அரசு விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என தெரிவித்திருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். இறையாண்மைக்கு எதிரான செயலாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடகா அரசு யாரையும் மதிக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவில் இரு முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும், தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு 2 லட்சம் ஏக்கர் கருகி வருகின்றது. தண்ணீர் இல்லாத விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் தர வேண்டும். மேலும், காவிரி தண்ணீர் கர்நாடகாவில் உள்ளதால் தண்ணீர் தரமாட்டோம் என கர்நாடகா அரசு கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை நாங்கள் தரமாட்டோம் என கூறினால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதனை தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பால், நெய் விலையை அரசு 5-வது முறையாக உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றது. இதனை முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்எல்சியில் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கூடுதல் விலையில் நிலம் கையகப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பாமக சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றோம். தற்போது தமிழகத்தில் காற்றாலை, சூரிய ஒளி மூலமாக 36,000 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகின்றது. ஆனால் என்எல்சி. மூலமாக 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருகின்றது. பசுமையாக வளர்ந்து வரும் நிலத்தை அழித்து மின்சாரம் பிற மாநிலத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடுகிறார்கள். ஆனால் விளைநிலத்தை நாசப்படுத்தும் வகையில் தற்போது 3-வது சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த போவதாக தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் என்எல்சி நிர்வாகம் 65 ஆயிரம் ஏக்கர் நிலத்தை குத்தகையாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் விவசாயத்தை பாதுகாக்க குத்தகையை ரத்து செய்து அரசு அக்கறையுடன் இருக்க வேண்டும். மேலும் என்எல்சி. 3வது சுரங்கத்திற்கு ரூ 3700 கோடி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் 26 கிராமத்தில் இருந்து நிலம் கையகபடுத்த உள்ளனர். இதில் 9 கிராமமான காவிரி, டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் நானும் டெல்டாக்காரன் என கூறுகிறார்.

சட்டமன்றத்தில் 100 சதவீதம் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். ஆனால் என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் செயல்படுகிறது? இது சம்பந்தமாக சரியான முறையில் எந்த தகவலும் தெரிவிக்க மாட்டார்கள். ஆகையால் பாமக என்றும் மண், மக்களை காப்பாற்ற வேண்டும் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெல் உற்பத்தியில் 4-வது மாவட்டமாக இருந்து வருகின்றது. ஆனால் என்எல்சி. மூலமாக சொற்ப மின்சாரம் தயாரிப்பதற்காக என்எல்சிக்கு தமிழக அரசு ஏன் ஆதரவாக உள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.

கடலூர் சிப்காட் பகுதியில் வசிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக தற்போது ஆய்வறிக்கையில் கூறப்பட்டு வருவது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இது மட்டும் இன்றி சைமா தொழிற்சாலை மூலமாக பரங்கிப்பேட்டை பகுதியில் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாய கழிவுகளை பைப் மூலமாக கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு அதனை சுத்திகரித்து கடலில் விடப்போவதாக தெரிய வருகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

கடலூர் மாநகரத்தில் மருத்துவ கல்லூரி கண்டிப்பாக அமைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரியை ரூ115 கோடி செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. ஆனால் சரியான முறையில் தூர்வாராமல் பெருமளவில் ஊழல் நடந்து வருகின்றது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்டு உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். மதுவிலக்கு குறித்து தமிழக அரசு பேச்சு மூச்சு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என முதலமைச்சர் கூறியது என்ன நிலையில் உள்ளது'' என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்