அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தானே விசாரிப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்தார். 1996 மே 13 முதல் 2002 மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு, 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், ‘பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை’ எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், "விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடர்பாக உயர் நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியுள்ளதால், வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையை சேர்த்திருக்க வேண்டும். மேலும், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார். எனவே, இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதேபோல், பொன்முடி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கைத் தானே தொடர்ந்து விசாரிப்பதாக தெரிவித்தார். அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் பதிவுத் துறையை இணைக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றி உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதால், பதிவுத்துறை தரப்பு விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பு வாதம் கேட்கப்படும், வழக்கில் பதிவுத்துறையும் சேர்க்கப்படும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE