ஆர்.பி.வி.எஸ்.மணியனை நீதிமன்றக் காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், கடந்த 11-ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், ‘பாரதியும் விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக அவர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார். இதன் அடிப்படையில் ஆர்.பி.வி.எஸ்.மணியன் மீது பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர், மணியனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி, ஆர்.பி.வி.எஸ்.மணியனிடம் ‘உங்கள் மீதான புகாருக்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆர்.பி.வி.எஸ்.மணியன், “நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எனது முதுமை மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், எனக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளன" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 27-ம் தேதி வரை ஆர்.வி.பி.எஸ்.மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே, ஆர்.பி.வி.எஸ்.மணியனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது செய்யப்பட்டதற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE