சென்னையில் அக். 3, 4-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர், காவல் அதிகாரிகள் மாநாடு

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் அக்.3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின் நிறைவில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும், திட்டங்களை அறிவித்தும் பேசுவார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அக்.3, 4-ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு: 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொள்வார்.

கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகள், திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE