பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம், டிக்கெட் முன்பதிவு மையங்களில் பொதுமக்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

வரும் ஆண்டில் ஜன.14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை, 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஜன.11-ம் தேதி பயணம் செய்பவர்களுக்காக டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம், டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாக, முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

காத்திருப்போர் பட்டியல்: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை விரைவு ரயில், தென்காசி செல்லும் பொதிகை விரைவு ரயில், மதுரைக்கு செல்லும் பாண்டியன் விரைவு ரயில் ஆகிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இடங்கள் முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முத்துநகர் விரைவு ரயில், நாகர்கோவில் செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயில், கோவைக்கு செல்லும் சேரன் விரைவு ரயில் ஆகியவற்றில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் ஆர்ஏசி (அமர்ந்து செல்லும்) இடங்கள் இருந்தன.

தூங்கும் வசதி இடங்கள்: திருச்சிக்கு செல்லும் மலைக்கோட்டை ரயில், சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நீலகிரி விரைவு ரயில் ஆகிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி இடங்கள் போதிய அளவில் இருந்தன.

இதுபோல, பெரும்பாலான ரயில்களில் ஏசி வகுப்புகள் இடங்கள் நிரம்பாமல் இருந்தன. இருப்பினும் முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

பெரும்பாலானோர் வெள்ளிக் கிழமை (ஜன.12) முதல் சொந்தஊர்களுக்குப் புறப்பட்டு செல்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE