மதுரை | பயணிகள் ரயில் தடம்புரண்டது: யாருக்கும் காயம் இல்லை

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே மதுரை - கோவை பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தடம்புரண்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இன்று இரவு சுமார் 8 மணி அளவில் கோவையில் இருந்து மதுரை ரயில் நிலையத்துக்கு பயணிகளுடன் வந்து சேர்ந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பிறகு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள யார்டு பகுதியில் ரயிலை நிறுத்தி வைக்கும் வகையில் இந்த ரயில் சென்றுள்ளது. அப்போது கடைசிப் பெட்டி மட்டும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது.

இந்த ரயில் கண்ணூர், பெங்களூரு இணைப்பு ரயில் என்பதால் தடம்புரண்ட ரயில் பெட்டியை தவிர்த்து, பயணிகளுடன் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம்புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர்கள் பொருத்தி உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். அதே தடத்தில் தான் இந்த ரயில் பெட்டி தடம்புரண்டுள்ளதாக களத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. அதிர்வு காரணமாக பெட்டி தடம்புரண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE