நாகையில் தங்க மீனை கடலில் விடும் விழா

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்:63 நாயன்மார்களில் ஒருவரான நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார், தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவரின் பக்தியை பரிசோதிக்க விரும்பிய சிவபெருமான், அதிபத்த நாயனார் வீசிய வலையில் தங்க மீன் ஒன்றை சிக்கச் செய்தார். வலையில் வேறு எந்த மீனும் இல்லாத நிலையில், அதிபத்தர் தங்க மீனையும் சிவபெருமானுக்காக கடலில் விட்டுவிட்டு சென்றார். இதையடுத்து சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார்.

இதை நினைவுகூரும் வகையில்நாகை புதிய கடற்கரையில் ஆண்டுதோறும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில், தங்க மீனை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கும்.

நிகழாண்டு நீலாயதாட்சி அம்மன் காயாரோகண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடப்பதால் சிவபெருமான் புதிய கடற்கரைக்கு எழுந்தருளவில்லை.

இதையடுத்து, நேற்று மாலை நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் மற்றும் அமுதீசர் ஆகிய கோயில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு சார்பிலும் வைர, வைடூரியங்கள் பதித்த தங்க மீனுடன் கூடிய சீர் வரிசை தட்டுகள் ஊர்வலமாக புதிய கடற்கரைக்கு எடுத்து வரப்பட்டன.

பின்னர், படகில் ஏறி தங்க மீனை சிவபெருமானுக்கு கடலில் அர்ப்பணிக்கும் உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE