டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை; வட மாநில ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம்: சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை

By செய்திப்பிரிவு

சிவகாசி: டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையால் வடமாநில ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,062 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக 1,216 நிரந்தர உரிமம் பெற்ற சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. தீபாவளி சீசன் விற்பனைக்காக ஆடிப்பெருக்கன்று 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை சூடு பிடித்ததால் கடைகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் இருந்த 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது.

வடமாநிலப் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை மையமாக வைத்து நடைபெறும் ஆப் சீசன் உற்பத்தியும் அதிகரித்து குடோன்கள் மற்றும் கடைகளில் பட்டாசுகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டன. 30, 60, 90, 120 சாட் என வானில் மிக உயரத்தில் சென்று வெடிக்கும் பேன்சி ரகப் பட்டாசுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், இந்த ரகப் பட்டாசுகள் வட மாநிலங்களில் அதிக அளவு விற்பனையாகவில்லை.

ஆடிப்பெருக்கன்று சிறப்பு பூஜையுடன் அனைத்துப் பட்டாசு கடைகள் மற்றும் ஆலைகளில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனை முன்பதிவு தொடங்கியது. ஆனால்,எதிர்பார்த்த அளவு பட்டாசு ஆர்டர்கள் வராததால் குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டும் தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வட மாநில ஆர்டர்கள் பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கவலையில் உள்ளனர்.

ஆப் சீசன் உற்பத்தியும் மந்தம்: இது குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஜனவரி முதல் ஜூலை வரை நடைபெறும் ஆப் சீசன் உற்பத்தி முழுவதும் வடமாநில ஆர்டர்களை குறி வைத்து நடக்கும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களில் தீபாவளி சீசனுக்காக பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஆப் சீசன் பட்டாசு விற்பனை மந்தமானதால் மொத்த வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் அதிக அளவு பட்டாசுகள் இருப்பு உள்ளன.

வழக்கமாக வட மாநிலங்களில் தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே பட்டாசுகளின் தேவையை வியாபாரிகள் முன்பதிவு செய்து விடுவர். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி முன்பதிவு தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் வடமாநில ஆர்டர்கள் பெருமளவில் வரவில்லை. இதனால் ஆலைகளில் உள்ள குடோன்களிலும் பட்டாசுகள் தேங்கி, சீசன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையால் வட மாநில விற்பனை மேலும் சரிவடைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்