“டெங்கு, மலேரியா, கொசு போல் தமிழகத்தில் திமுகவும் இருக்கக் கூடாது” - நடைபயணத்தில் அண்ணாமலை பேச்சு

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: “டெங்கு, மலேரியா, கொசு எப்படி தமிழகத்தில் இருக்கக் கூடாதோ, அதேபோல் திமுகவும் இருக்கக் கூடாது” என்று கொடைக்கானலில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று (செப்.12) மாலை திண்டுக்கல் மாவட்டம் பழநி சட்டமன்ற தொகுதி கொடைக்கானலில் நடைபயணத்தை தொடங்கினார். கொடைக்கானல் நாயுடுபுரம் சித்திவிநாயகர் கோயிலில் தொடங்கி, ஏரிச்சாலை, பேருந்து நிலையம், அண்ணாசாலை வழியே மூஞ்சிக்கல் வரை அவர் நடந்து சென்றார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: “ஊழல்வாதிகளாக திகழும் திமுக, கமிஷனுக்காக கடன் வாங்கும் அரசு. இந்தியா இன்றைக்கு பாதுகாப்பாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எத்தனை குண்டுவெடிப்புகள், எத்தனை தீவிரவாதிகள் நாட்டுக்குள் வந்தார்கள். ஆனால், 9 ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் எங்கேயாவது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததா? நம் நாடு பாதுகாப்பாக இருக்கிறது.

தமிழகத்தில் திமுகவினரும், அமைச்சர்களும் பிரதமர் மோடியை பார்த்து பயப்படுகின்றனர். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக் கோரி நடத்திய முற்றுகை போராட்டத்தில் என்னை கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். என் மீதும், பாஜக மீதும் குற்றம்சாட்டும் முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு முறை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

ஒரே ஒரு குடும்பத்துக்காக, முதல்வர் உழைத்து வருகிறார். மகனும், மருகனும் சம்பாதிப்பதற்காக ஆட்சி நடக்கிறது. சிலருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்று குழப்பம் இருக்கிறது. சனாதனம் என்பது மக்கள் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை செல்லிக் கொடுக்கும் தர்மம். எல்லா காலத்திலும் நிலைத்திருப்பது. அதற்கு முடிவில்லை. எல்லா மக்களையும் சனாதனம் அரவணைத்து சென்றது. அரவணைக்க கூடியது இந்துத்துவம்.

விவசாயி, கூலித் தொழிலாளி, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் பாஜகவில் உள்ளனர். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. எங்கள் காலத்திற்கு பிறகு உங்களுடைய குழந்தைகள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தமிழகத்தின் தலையெழுத்து மாறும். டெங்கு, மலேரியா, கொசு எப்படி தமிழகத்தில் இருக்கக் கூடாதோ அதேபோல் திமுகவும் இருக்கக் கூடாது. திமுக என்றால் தீயசக்தி என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் சொன்னது சரிதான்.

திமுக ஆட்சியில் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியாது. சுதந்திரம் கிடைத்தும் இத்தனை ஆண்டுகளாகியும் கொடைக்கானல் மலைக் கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகளின்றி குழந்தைகள் பிறக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு, மத்தியிலும், தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்” என்று அவர் பேசினார். தொடர்ந்து, நாளை (செப்.13) ஆத்தூர், நிலக்கோட்டை, செப்.14-ல் நத்தம், திண்டுக்கல், செப்.15-ல் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், செப்.16-ல் பழநியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE