காவிரியில் தண்ணீர் திறக்க கோரி செப்.20-ல் சிதம்பரத்தில் தொடர் முழுக்க போராட்டம்: காவரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்

By க.ரமேஷ்

கடலூர்: குறுவை, சம்பாவுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கோரி வரும் 20-ம் தேதி சிதம்பரத்தில் தொடர் முழுக்க போராட்டம் நடத்துவது என்று காவரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.12) சிதம்பரத்தில் நடைபெற்றது. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும், குறுவை சாகுபடி பயிர்களை பாதுகாத்திடவும், எதிர்வரும் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை உடனடியாக காவிரியில் திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைந்து நடத்தி முடித்து தமிழக டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்;

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் அணைகளை காவிரி மேலாண்மை வாரியமே ஏற்று அணைகளில் நீரை திறந்து விட வேண்டும் என்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள மத்திய அரசின் அஞ்சல் அலுவலகத்தின் முன் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் சரவணன், குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்க துணை செயலாளர் காஜா மொய்தீன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அத்திப்பட்டு சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன், கரும்பு விவசாய சங்க தலைவர் ஆதிமூலம் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE