மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மாறாக, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகப் பேசி வரும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது; மத்திய அரசு மறு கேள்வி கேட்காமல் அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். அரசு நிர்வாகத்தின் அடிப்படை தெரியாமல் சித்தராமைய்யா தெரிவித்துள்ள இந்தக் கருத்து கூட்டாட்சி முறையை சிதைத்து விடும்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா, "மேகேதாட்டு அணை கட்டப் படும் பகுதி கர்நாடக எல்லையில் தான் உள்ளது. அதை தமிழ்நாடு எதிர்க்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், தமிழ்நாடு தேவையில்லாமல் தொல்லை கொடுக்கிறது. மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகும் கூட, அதற்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய முன்வரவில்லை" என்று கூறியிருக்கிறார்.

பலமுறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், பதவி வகித்தவரும், இரண்டாவது முறை முதல்வராக பதவி வகிப்பவருமான சித்தராமய்யா, இந்திய அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம், இரு மாநில நீர்ப்பகிர்வு உடன்பாடு ஆகியவற்றின் அடிப்படை கூட தெரியாமல் தமிழகத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பது தவறு; இது கண்டிக்கத்தக்கது.

மேகேதாட்டு அணை கட்டப்படும் பகுதி கர்நாடகத்தில் இருப்பதால், அது பற்றி தமிழ்நாடு கேள்வி எழுப்பக் கூடாது என்பது அறியாமையின் உச்சம் ஆகும். தமிழ்நாடும், கர்நாடகமும் இந்தியா என்ற நாட்டின் இரு மாநிலங்கள் தானே தவிர, இரு தனித்தனி நாடுகள் அல்ல. எனவே, கர்நாடகம் அதன் விருப்பம் போல செயல்பட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட முடியும்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பாயும் ஆறுகளில் கூட முதல்மடை பாசனப் பகுதி நாடு விருப்பம் போல அணைக் கட்டுக்கொள்ள முடியாது. அதற்கான பன்னாட்டு ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகம், காவிரி நீர் சிக்கலில் கடைமடை பாசனப் பகுதியான தமிழகத்தின் உரிமைகளை புறக்கணித்து விட்டு செயல்பட முடியாது.

சென்னை மாகாணத்திற்கு, மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1924ம் ஆண்டில் கையெழுத்தான காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகளை கட்ட முடியாது. காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை சுட்டிக்காட்டி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாவிட்டால், மேகேதாட்டு அணைக்கான கர்நாடகத்தின் விண்ணப்பத்தை ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று 2015ம் ஆண்டில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, பா.ம.க. மக்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உறுதி அளித்திருக்கிறார்.

ஆனால், இந்த வரலாற்று உண்மைகள் அனைத்தையும் மறைத்து விட்டு, "எங்கள் மாநிலத்தில் நாங்கள் அணை கட்டிக் கொள்வோம்" என்று சித்தராமய்யா பேசுவது மிக ஆபத்தானது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அவற்றின் தேவைக்காக மற்ற மாநிலங்களை சார்ந்தே உள்ளன.

தமிழகத்தில் கல்பாக்கம், நெய்வேலி, கூடங்குளம் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கு அனுப்பப் படுகிறது. சித்தராமய்யாவின் அணுகு முறையை பிற மாநிலங்களும் கடைபிடிக்கத் தொடங்கினால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்தாக மாறிவிடும். கர்நாடகம் காவிரியில் தோன்றினாலும் அதில் கை வைத்து தடுக்க கர்நாடகத்திற்கு அதிகாரமில்லை.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றால், மேகேதாட்டு அணையை கட்டுவது தான் ஒரே வழி என்று சித்தராமய்யா கூறுவதும் தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும். காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் இப்போது கட்டப்பட்டுள்ள அணைகளின் கொள்ளளவு 115 டி.எம்.சி ஆகும்.

அந்த அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு வெளியேற்றப்படும் உபரி நீர் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது. 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், அந்த நீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் போய்விடும். எனவே, மேகேதாட்டு அணை கட்டுவது தமிழகத்திற்கு பெரும் தீங்காகத் தான் அமையுமே தவிர, ஒரு போதும் தீர்வாக அமையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

எனவே, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மாறாக, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பேசி வரும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்." என ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்