பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிப்பு - அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர் அஞ்சலி

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலை வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், கயல்விழி மற்றும் நவாஸ்கனி எம்.பி., எம்எல்ஏக்கள் செ.முருகேசன், காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழரசி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர்கள், கருப்பு முருகானந்தம், பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தினகரன் தலைமையில் அமமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி, பேரன் ரமேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது சுந்தரி பிரபாராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த வாரம் முதல்வரை சந்தித்து விடுத்த கோரிக்கையை ஏற்று, இமானுவேல் சேகரனின் திருவுருவச் சிலையுடன், மணிமண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், எஸ்சி பிரிவு மாநிலதலைவர் ரஞ்சன்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ உள்ளிட்டோரும், மதிமுகவினர், மாநில துணைப்பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் தர்மர் எம்.பி. தலைமையில் அஞ்சலி செலுத்தினர். பாமக சார்பில் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜூ தலைமையிலும், தேமுதிகவினரும் மற்றும் முன்னாள் எம்எல்ஏ முருகவேல் ராஜன் தனது கட்சியினருடன் வந்தும் அஞ்சலி செலுத்தினர்.

தமமுக தலைவர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE