இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அறிவிப்புக்கு அண்ணாமலை பாராட்டு

By செய்திப்பிரிவு

பரமக்குடி/மதுரை: பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பரமக்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கடந்தாண்டே பாஜக கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தேவேந்திர குல மக்களை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என அம்மக்களின் சார்பில் மத்திய அமைச்சர்கள், தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற சாதக, பாதகங்களை பார்த்து மத்திய, மாநில அரசுகள் உறுதியான கொள்கை முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் உதயநிதி தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறுதான். ஒருவரின் தலைக்கு பரிசுத் தொகை நிர்ணயம் செய்பவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்பதே அர்த்தம்.

சனாதானத்தை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்பவர் ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால், அவர் ஒரு போலி சாமியாராகத்தான் இருக்க வேண்டும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE