எட்டயபுரம் | பெற்றோர் வற்புறுத்தலால் காலை உணவை புறக்கணித்து கண்ணீர் சிந்திய மாணவர்கள் - அமைச்சர் கீதாஜீவன் விசாரணை

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே பெற்றோர் வற்புறுத்தலால் பள்ளியில் காலை உணவை மாணவ, மாணவியர் சாப்பிட மறுத்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 11 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காலை உணவுத் திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியசெல்வி (29) நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 25-ம் தேதி முதல் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து வருகிறார். ஆனால் மாணவ, மாணவியர் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தனர்.

இதுகுறித்து, மேலதிகாரிகளுக்கு சமையலர் முனியசெல்வி தகவல் தெரிவித்தார். கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை பள்ளிக்கு வந்து, காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கு வந்த 11 மாணவ, மாணவியருக்கும் வெண்பொங்கல் பரிமாறப்பட்டது. ஆனால், குழந்தைகள் சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்தனர். அதிகாரிகள் காரணம் கேட்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது காலை உணவு திட்ட சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு திட்டங்களில் தனிநபர் விருப்பு வெறுப்புகளை திணிக்கக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி விட்டுசென்றனர்.

அதன்பின் அமைச்சர் பெ.கீதாஜீவன், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அமைச்சர் கூறும்போது, “பள்ளியில் நேரில் ஆய்வு செய்ய வந்தோம். பள்ளி மாணவ மாணவியருடன் பேசினேன். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. தனிப்பட்ட பிரச்சினையில் சமையலர் பெண்ணுடன் சண்டை போட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நாளையே முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.

சாதிப் பிரச்சினையல்ல: தொடர்ந்து மதியம் 2 மணியளவில் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய் மீண்டும் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஊர்மக்கள், “எங்களுக்கும் சமையலர் முனியசெல்வியின் கணவருக்குமான தனிப்பட்ட பிரச்சினையில்தான் குழந்தைகளை சாப்பிட அனுப்பவில்லை. இதில் ஜாதி பிரச்சினை எதுவுமில்லை. அதே சமூகத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காலை உணவுத் திட்ட சமையலராக நியமிக்க வேண்டும்” என்றனர்.

மாற்று நபர் நியமிக்க அவகாசம் தேவை. அதுவரை குழந்தைகள் சாப்பிடுவதை தடுக்கக் கூடாது என கோட்டாட்சியர் கூறினார். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE