“உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியாராகவே இருக்க வேண்டும்” - அண்ணாமலை

By கி.மகாராஜன் 


மதுரை: ‘சனாதானத்தை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு ஒருவரின் தலைக்கு விலை நிர்ணயம் செய்பவர் போலி சாமியாராகவே இருக்க வேண்டும்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவிப்பது நல்லதுதான். அப்போதுதான் பாஜக வளரும். கருணாநிதி இருந்தால் எதிர்ப்புகளை சரியாக கையாள்வார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தமாட்டார். பாஜக தனித்துவத்தை தாண்டி, உதயநிதியால் அதிகளவில் வளர்ச்சி அடையும். இதை நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பீர்கள்.

அமைச்சர் உதயநிதி தலைக்கு பரிசுத் தொகை அறிவித்தது தவறு. ஒருவரின் தலைக்கு பரிசுத் தொகை நிர்ணயம் செய்பவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்பதே அர்த்தம். சனாதானத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்பவர் ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால், அவர் ஒரு போலி சாமியாராகத்தான் இருக்க வேண்டும். இது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

தமிழ்த் திரையுலகில் சாதிய வன்மங்கள் கொண்ட திரைப்படங்கள் வருகின்றன. சினிமாவில் என்ன கருத்துகளை சொல்கிறோம் என்பது முக்கியம். முக்கியமான கருத்துகளையே சினிமா மூலம் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடப்பதற்கு சினிமா காரணமாகிவிடுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. 1952-இல் இருந்து 1967 வரை 4 முறை ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற்றுள்ளது. இது பாஜகவின் கொள்கை முடிவு. இருப்பினும் உடனடியாக கொண்டுவர முடியாது. இந்தியாவை பாரத் என்றும், பாரத் என்பதை இந்தியா என்றும் பயன்படுத்துவதால் எந்த சட்ட சிக்கலும் ஏற்படாது என அரசியலமைப்பு சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். பாரதம் என்ற வார்த்தை இந்தியாவை அழகாக நுட்பமாக காட்டுகிறது.

இண்டியா கூட்டணி வந்ததால் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது உண்மையல்ல. பாஜக கொண்டு வந்துள்ள பல முக்கிய திட்டங்களில் பாரத் என்கிற பெயர் உள்ளது. இண்டியா கூட்டணி என்று நாங்கள் வைத்ததால்தான் அண்ணாமலை உயிரோடு இருக்கிறார் என்று கூட சொல்வார்கள். ஜி20 மாநாடு கட்சித் தலைவர்களை அழைப்பதற்கான மாநாடு இல்லை. முன்னாள் பிரதமர்கள் மற்றும் தற்போதைய முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரை அழைக்க வேண்டுமோ அழைத்துள்ளார்கள்.

சந்திரபாபு நாயுடு கைது குறித்து நான் கருத்து கூறினால் சரியாக இருக்காது. வேறு மாநிலத்தில் நடக்கும் பிரச்சினை எனக்கு தெரியாது. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் சேர்க்கப்படுவாரா என்பதற்கு நான் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை" என்று அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE